நற்கருணை, கிறீஸ்துவின் உண்மைச் சரீரம்......
( லான்சியானோ புதுமை )
1200 ஆண்டுகளுக்கு முன் இத்தாலி நாட்டிலுள்ள லான்சியானோ நகரில் புனிதப்படுத்தப்பட்ட ஒரு அப்பம் திடீரென்று அப்பத்தின் தோற்றத்திலிருந்து இரத்தத்துடன் கூடிய மாமிசத் துண்டாக மாறியது.
" அது ஒரு கட்டுக் கதை, " " வெறும் கர்ண பரம்பரைப் பேச்சு " என்றனர் பலர்.
ஆனால் திருச்சபைப் புனிதப்பீடம் இறுதியானதும், சரியானதுமான - விஞ்ஞானப் பூர்வமான ஆராய்ச்சிக்கு உத்தரவிட்டது.
ஆராய்ச்சியின் முடிவு அனைவரையும் திகைப்படையச் செய்து விட்டது! அந்த மாமிசத்துண்டு உண்மையிலேயே ஒரு மனித இதயத்தின் ஒரு மென்மையான பாகம் என்பது நிரூபணமாயிற்று. அது கலப்படம் அற்று, தூய்மையான ஒரு மனித இதயத்திலிருந்து இப்போது தான் துண்டித்து எடுக்கப்பட்டது போலிருந்தது.
திருச்சபைப் புனிதப்பீடம், அந்த ஆராய்ச்சிகள் உண்மைதானா என்று அறியும் பணியினை வேறுபல விஞ்ஞானிகளிடம் ஒப்படைத்தது. பிறகு எல்லா சாட்சியங்களும் மொத்தமாக ஒன்று திரட்டப்பட்டன. எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி விஞ்ஞானிகள் அனைவரும் ஒத்துக் கொண்ட ஒரு பேருண்மை இது தான்:
இது ஒரு மனித இருதயத்தின் தசைத் துண்டு தான்.
வைத்தியர் ஒருவர் இருதயத்தின் நடுப்பகுதியின் வழியாக அறுவைச் சிகிச்சைக்கான கத்தியால் மிகக் கவனமாக வெட்டி எடுக்கப்பட்ட சதைத்துண்டு போல் இருந்தது. ஆராய்ச்சியின் இறுதி முடிவுகளை வத்திக்கானின் அதிகாரப் பூர்வமான ஏடான " ஒசர்வாதெரே, ரோமானோ " ( Osservetore Romano ) 1971 - ம் ஆண்டு செப்டம்பர் இதழில் வெளியிடப்பட்டது.
இப்பழம்பெரும் புதுமை " நற்கருணைப் புதுமைகள் " என்னும் தோல் சுவடிகளில் காணக்கிடக்கிறது. இப்புதுமைகளைப் பற்றி முதலில் எழுதிய புனித சிப்ரியானின் பொற்காலத்திலிருந்து இன்றைய நாகரீக காலம் வரை இப்புதுமைகள் திருச்சபையின் சரித்திரத்தில் ஒளிர்விட்டுப் பிரகாசித்டுக் கொண்டிருக்கின்றன. இப்புதுமைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது போல்செனாவில் நிகழ்ந்தது. இதுவே ஒர்விடோ பேராலயத்தின் அழகுக்கும் ரபேலின் சிற்பக் கலைக்கு உயிரூட்டியது. இதன் விளைவாகவே திருச்சபை 1264-ல் " நற்கருணைத் திருவிழா " வை ஏற்படுத்தியது.
சீயென்னா நகரில் நடந்த இதே போன்ற இரு புதுமைகளைப் போலவே, லான்ஸியானோ நகரில் நற்கருணை பேரதிசயம் இரண்டு வித்தியாசமான வழிகளில் நிகழ்ந்தது. லான்ஸியானோவின் புதுமையின் முதல் நிகழ்ச்சி 8வது நூற்றாண்டிலும் இரண்டாவது நிகழ்ச்சி 1273லும் நிகழ்ந்தன. இந்த இரண்டாம் நிகழ்ச்சி " ஓபிடாவின் அற்புதம் " என்றும் அழைக்கப்படுகிறது. முதலில் புதுமை நடந்த லான்ஸியோனோவியிருந்து புனிதப் பொருட்கள் ( Holy Relics ) மார்ச் மாநிலத்திலுள்ள ஓபிடா என்னும் இடத்துக்கு ஏற்கனவே மாற்றப்பட்டிருந்தன. இந்த இடத்தில் இரண்டாவது நிகழ்ச்சி நிகழ்ந்ததால் அதற்கு " ஓபிடாவின் அற்புதம் " என்ற பெயர் வழங்கலாயிற்று.
பாரம்பரியம் நமக்கு அறிவிக்கும் பல நற்கருணைப் புதுமைகளிலும் ஒரு முக்கிய கருத்துப் பொதுவாகக் காணப்படுகிறது. குருவானவர் திருப்பலியில் வசீகர வார்த்தைகளை உச்சரித்ததும் அப்பமும் இரசமும் முறையே உண்மையான சதையாகவும் உண்மையான இரத்தமாகவும் மாறியுள்ளது. அல்லது அப்பம் மட்டும் உண்மையான சதையாகவும் அல்லது இரசம் மட்டும் நிஜமான இரத்தமாகவும் மாறியுள்ளன. இந்த மாறுதல்களில் அளவிலும் முறைகளிலும் வேறுபாடுகள் இருந்துள்ளன.
மற்ற இடங்களில் நடந்த புதுமைகளுடன் ஒப்பிடுகையில் லான்ஸியானோவில் நிகழ்ந்தன பூரணமானதாகவும், துல்லியமானதாகவும் உள்ளது. ஏனெனில் இங்கு அப்பம் - இரசம் இரண்டுமே பெருமளவில் மாற்றமடைந்தன. பத்திரப்படுத்தப்பட்டுள்ள தஸ்தாவேஜுகளின் அடிப்படையில் இந்தப் புதுமை நிகழ்ச்சி எவ்வாறு நடைபெற்றது என்பதை விவரமாகப் பார்ப்போம்.
எட்டாம் நூற்றாண்டில் ஒரு நாள் ( நாள் சரியாக குறிப்பிடப்படவில்லை ) லான்ஸியானோ நகரிலுள்ள புனிதர்கள் லெகான்சியான் - டாமிஷியான் ஆலயத்தில் புனித பேசில் சபைக்குரு ஒருவர் இலத்தீன் முறையில் புளியாத அப்பத்துடன் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார். அப்பத்தையும் இரசத்தையும் வசீகரம் செய்த பின் திவ்விய நற்கருணையில் உண்மையாகவே இயேசு இருக்கிறாரா என்ற பலத்த சந்தேகம் அவரை ஆட்கொண்டது. அப்போது உண்மையாக நிகழ்ந்த அற்புதம் யாதெனில் அப்பம் கிறீஸ்துவின் உண்மையான சதையாகவும், இரசம் உண்மையான இரத்தமாகவும் மாறின. அதுமட்டுமல்ல, இரத்தம் உடனே உறைந்து வேறுபட்ட உருவங்கள் கொண்ட 5 துண்டுகளாகவும் உருமாறியது. அதிர்ச்சியடைந்த அக்குரு நடந்ததை மூடி மறைக்க விரும்பினார். ஆனால் அவரால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது போகவே, நடந்த புதுமையை தனது விசுவாசிகளுக்கு எடுத்துரைத்தார்.
இதுதான் இந்த மாபெரும் புதுமையின் சுருக்கம். தற்கால விசுவாசிகூட இதில் ஏதாவது தவறு அல்லது பொய்மை கலந்திருக்கும் என்று சொல்ல முடியாது, மேலும், இலத்தீன் ரீதி, கிழக்கத்திய ரீதி என்று பிரிவுகள் ஏற்படுமுன், கி.பி முதல் நூற்றாண்டுகளில், கிரேக்க குருக்களும் வட்டவடிவமான புளியாத அப்பத்தைப் பயன்படுத்தி திருப்பலி நிறைவேற்றி வந்தனர் என்பதற்குச் சரித்திர சான்றுகள் உள்ளன. பிற்காலத்தில் தான் கிரேக்க ரீதியினர் புளித்த, நீண்ட வடிவ அப்பத்தைத் திருப்பலியில் உபயோகித்தனர், இன்றும் உபயோகிக்கின்றனர்.
12 நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்றும் புதுமையாகக் கிறீஸ்துவின் சதையாகவும் இரத்தமாகவும் மாறிய இந்தப் பரிசுத்த பண்டங்கள் குணம் மாறாமல் அப்படியே இருக்கின்றன. மேலெழுந்தவாரியாக ஆராய்ச்சி செய்கையில், கிறீஸ்துவின் சதையாக மாறிய திரு அப்பம், முன்பிருந்த பரிமாணத்தைக் கொண்டிருப்பதுடன் மரநிறத்துடனும் சதை நாருகளுடனும் விளக்கின் முன் வைக்கப்படும் போது இளஞ்சிவப்பாகவும் காட்சியளிக்கிறது.
கிண்ணத்திலுள்ள திரு இரத்தம் 5 இரத்தத் திரள்களாகவும் மஞ்சள் கலந்த மண்நிறமாகவும் காட்சியளிக்கிறது. இதில் ஒரு இரத்தத் திரளில் இரண்டு இரத்தத்துண்டுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படுகின்றன. அது மொத்தன் 16 கிராம் - 505 கிராம் எடையுள்ளது. அவை ஒவ்வொன்றின் எடைகள் வருமாறு, 8 கிராம்கள், 2.45 கிராம்கள், 2.85 கிராம்கள், 2.5 கிராம்கள் மற்றும் 1.15 கிராம்கள் - இத்துடன் 5 மில்லிகிராம் எடையுள்ள இரத்தத் துகள்களும் உள்ளன.
இப் புதுமையின் அதிசயத் தன்மைகள் ஒருபுறமிருக்க, சமீபகாலம் வரை வேத விற்ப்பன்னர்களிடையே ஒரு சர்ச்சை - எல்லா நற்கருணைப் புதுமைகளிலும் போல் இருந்து வந்தது. புனிதமான தசையும், இரத்தமும் சாதாரண பழம் பொருட்களாக மதிக்கப் பட வேண்டுமா அல்லது அவற்றில் கிறீஸ்துவின் உண்மைப் பிரசன்னம் மறைந்திருப்பதாகாக் கொள்வதா? கிறீஸ்துவின் உண்மைப்பிரசன்னம் ஏற்றுக் கொள்ளப்படும் போது, அங்கு ஆராதனை இடம் பெறல் வேண்டும்.
இப்பிரச்சினையை பிரான்சிஸ்கன் சபையினரும், தோமினிக்கன் சபையினரும் விவாதித்து மாறுபட்டக் கருத்துக்களையும் தீர்வுகளையும் தெரிவித்துள்ளனர். நம்மைப் பொறுத்த வரையில் இப்பிரச்சினையை தீர ஆராய வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.