லான்சியானோ பட்டணத்தைப் பற்றி சரித்திர ஆதாரங்கள் :
இரு பெரிய நற்கருணைப் புதுமைகளைக் கண்டுள்ள லான்சியானோ நகரம், துவக்க முதலே கிறீஸ்துவின் திரு இரத்தத்துடன் ஒரு தூய பாரம்பரியத் தொடர்பு கொண்டுள்ளது. இறைத் திட்டத்தின் படியே அப்ரூஸியிலுள்ள இந் நகரில் இரண்டு தடவை நிகழ்ந்துள்ள பெரும் நற்கருணை புதுமைகள் தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல.
அன்ஷா, அனஷியா, அன்ஷானம் என்று பழைய தஸ்தாவேஜுகளில் கி.பி. 1000 வரை, பல பெயர்களில் அழைக்கப்படும் இந்நகரம் ' பிரண்டானியன் ' களின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது. பல தரப்பட்ட பாரம்பரியங்கள் இருப்பினும், கிறீஸ்துவுக்குச் சில காலத்துக்கு முன்பு இது தோன்றியது என்பது உறுதியாகியுள்ளது.
அந்தப் பழைய நகரம் இன்று இல்லை. சில சரித்திர ஆசிரியர்களின் கூற்றுப்படி, ' பிராங்ஸ் ' களின் அரசரான ' பெபின் ' என்பவரால் இது அழிக்கப்பட்டது. வேறு சிலர், நில நடுக்கத்தால் அது தரைமட்டமாக்கப்பட்டது என்பர்.
" லான்சியானோ நகரின் நிகழ்ச்சித் தொகுப்பு " என்னும் சிறந்த நூலை எழுதியுள்ள சரித்திர ஆசிரியர் கியாகோமா பெஃல்லா என்பவரும் பிந்தைய கருத்தையே ஆதரித்துள்ளார்.
லான்சியானோவின் மற்றுமொரு சரித்திர ஆசிரியரான பேராயர் அன்டியானோரி என்பவர் தனது " லான்ஸியானோ நகரின் சரித்திரக் கோர்வை " என்னும் புத்தகத்தில், அழிந்து போன பழைய நகர் இன்றைய நகருக்கு 3 கி.மீ. தள்ளி அமைத்து இருந்தது என்கிறார்.
ரோமையர், பைஸான்டியர், அதன் பின்னர் பாப்பிறைகளால் நன்கு போற்றப்பட்ட நகரம் இது. 1515ல் பாப்பிறை பத்தாம் ஆசீர்வாதப்பர் இதை ரோமுக்கு நேர் மேற்பார்வையிலுள்ள ஒரு மறைமாவட்டமாக்கினார். 1562ல் பாப்பிறை 4ம் பத்திநாதர் அதை மாபெரும் இரண்டு புதுமைகள் நிகழ்ந்த புனித தலத்துக்குரிய மரியாதையைப் பெரும் அதிமேற்றிராசனமாக உயர்த்தினார்.
நமது ஆராய்ச்சியில் தெரிய வருவது 13வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்நகரின் பழைய பெயரான " அன்ஷானம் " " லான்ஸானம் " என்று மாற்றமடைந்தது. இது கிறீஸ்துவின் திருக்கல்லறை மீட்கப்பட்டதைக் குறிக்கும், லான்சியானோ நகரின் அரச முத்திரையில் ( COAT OF ARMS ) ' 1 ' என்ற எழுத்து இதனால் தான் சேர்க்கப்பட்டது.
13ம் நூற்றாண்டில் லான்சியானோ, LANCIA ( LANCE ) (ஈட்டி) என்ற வார்த்தையைத் தழுவி வருவதாலும், ஈட்டி கிறீஸ்துவின் திருஇரத்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாலும் இங்கு நடந்த நற்கருணைப் புதுமைக்கும் இப்பெயருக்கும் ஏதோ பொருத்தம் இருப்பதாகத் தோன்றுகிறது.
தஸ்தாவேஜுகள் பூர்வமான ஆதாரங்கள் இதற்கு இல்லை எனினும், தெய்வாதீனமாக ஏதோ ஒரு தொடர்பு லான்ஸியானோ என்ற பெயருக்கும் அங்கு நடந்த இருபெரும் நற்கருணை புதுமைகளுக்கும் இருப்பதாகத் தெரிகிறது.
இந்தப் பாரம்பரியத்தின்படி, லோஞ்சினஸ் என்ற கிறீஸ்துவின் விலாவைக் குத்தித் திறந்த ரோமைச் செந்தூரியன் இந்த லான்ஸியானோ நகரைச் சேர்ந்தவன் என்று சொல்லப்படுகிறது. குறைவான பார்வையுள்ளவனாக இருந்த அவன் கிறீஸ்துவின் இரத்தம் தோய்ந்த தனது கைகளால் கண்களைத் தொட்டதும் பார்வை அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக அவன் கிறீஸ்தவனாக மனந்திருந்தி ஒரு வேத சாட்சியாக மரித்தான்.
ஆரம்ப காலத்தில் லான்ஸியானோவில் இருந்த பேசிலியன் துறவிகள் வசம் புனித லோஞ்சினஸ் - புனித டொமீஷியன் ஆலயம் இருக்கிறது. மேலும், " புனித லோஞ்சினஸின் பாலம் " என்று அழைக்கப்பட்ட ஊற்று ஒன்று இருந்ததாகவும் அதன் அழிந்த பகுதியில் 1532ல் அதைக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அறிகிறோம்.
லான்ஸியானோவின் மக்களால் புனித லோஞ்சினஸ் எப்போதும் வணக்கத்துடன் போற்றப்பட்டு வந்திருக்கிறார். சீற்றி என்னும் இடத்தில் வேதசாட்சிகளாக மரித்தவர்கள் புனிதர்கள் லோஞ்சினஸும் டொமீஷியனும் என்று அறியப்பட்டுள்ளது. ' சீற்றி ' யில் புனித லோஞ்சினஸின் திருப்பண்டங்கள் சில பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பொல்லாண்டிஸ்டுகள் பிப்ரவரி 5ல் இவ்விரு புனிதர்களின் விழாவைக் குறித்துள்ளனர்.
முதல் மாபெரும் நற்கருணை புதுமை நிகழ்ந்த இந்தப் புனித லெகான்சியன் மற்றும் புனித டொமிஷியன் ஆலயத்தின் சரித்திரத்தை நோக்குவது சாலப் பொருத்தமாகும். சரித்திர ஆசிரியர் பொல்லிடோரோ, சார்லிமாக்னே சகாப்த்தத்திற்கு முன்பே புனித இத்தேவாலயம் கிரேக்க பேசியன் துறவிகளின் மடத்துடன் இணைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
சரித்திர ஆசிரியர்கள் மான்சிஞ்ஞோர் ஆண்றினோரியும் மற்றவர்களும் கூறுவதிலிருந்து இந்தக் கோயில் அழிந்து விட்ட அற்றீனா நகருக்குத் தெற்கே ஏறத்தாழ 3 கி.மீ. தூரத்தில் இருந்திருக்கிறது.
புதுமை நிகழ்ந்த காலத்தில் இத்தேவாலயம் பேசிலியன் துறவிகளால் நடத்தப்பட்டுள்ளது. ஆலயவளாகத்தில் மடம் ஒன்றும் அதன் தலைவராக மடாதிபதியும் இருந்திருக்கின்றனர். பெபின் நாட்டு பிராங்குகளால் பழைய லான்ஸியானோ தரைமட்டமாக்கப்பட்டுப் பிறகு புதிய லான்ஸியானோ கட்டப்பட்ட பொழுது அதன் மத்தியில் இவ்வாலயம் எழுந்தது. இதைச் சுற்றி வாழ்ந்த மக்கள் கூட்டம் பெருகவே இன்றைய லான்ஸியானோ உருவாகியது.
| Next Page |