Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

   

புதுமை நிகழ்ந்த நூற்றாண்டு - அதன் சரித்திர சான்றுகள் :

இப்போது நாம் முக்கிய கட்டத்திற்கு வருகிறோம். அதாவது நமக்குக் கிடைத்துள்ள சரித்திரச் சான்றுகளை வைத்து, இப்புதுமை நிகழ்ந்த காலத்தைக் கணிப்போம். பாரம்பரிய நம்பிக்கையின் படி, இப்புதுமை 8ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்பதற்கு ஆதாரமாகச் சரித்திர சான்றுகள் உள்ளன. பிராங்ஸ் சாதியினரால் அழிக்கப்படுமுன்னால், 8வது நூற்றாண்டில் பழைய நகரம் ஆரம்பகட்டத்தில் இருந்ததாகவும் அப்போது ஆலயம் நகருக்கு வெளியில் அமைந்திருந்ததாகவும் தெரிய வருகிறது.

சில சான்றுகளின் படி, 538ல் பைஸாண்டின் பெலிசாரியுஸால் கோத் வம்சம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, சுமார் 6வது நூற்றாண்டில் பேசிலியன் துறவிகள் இத்தாலிக்கு வந்ததாகவும் அவர்களாலேயே இந்த ஆலயம் நிர்வகிக்கப்பட்டதாகவும் ஆதாரங்கள் உள்ளன.

இந்தக் காலகட்டத்தில் கான்ஸ்டாண்டின் நோபிளின் பிதாப்பிதாவின் ஆளுகை புக்லியா, கலாப்ரியா, அப்ருஸ்ஸி ஆகிய இடங்களில் பரவவே, கிரேக்க பேசிலியன் துறவிகள் இப்பகுதியிலுள்ள ஆலயங்களையும் மடங்களையும் நிர்வாகித்து வந்தனர். இத்தாலிக்கு வந்த பின் இந்த கிரேக்க துறவிகள் இலத்தீன் ரீதியைப் பின்பற்றிய காரணத்தால் தான் இப்புதுமையில் வரும் கிரேக்கத் துறவியும், இலத்தீன் ரீதிப்படி திருப்பலி நிறைவேற்றியிருக்கிறார்.

எதுவாயினும், இக்கூற்றுக்கு ஆதாரமாகப் பின்வரும் சரித்திரச் சான்றுகள் உள்ளன. 401-ம் ஆண்டு ரூபின்ஸ் என்பவர் இத்தாலியிலுள்ள தங்கள் மடங்களில் இலத்தீன் ரீதியைப் புகுத்தியதால், புனித பேசிலியன் துறவிகளும் இலத்தீன் கற்று அந்த ரீதியில் மறைப்பணி புரிந்தனர்.

இப்புதுமை 8வது நூற்றாண்டில் நிகழ்ந்தது என்னும் பரம்பரை கூற்றை மேற்கூறியவாறு உறுதிப்படுத்திக் கொண்டபின், இப்புதுமைக்கு ஆதாரமாக இருக்கும் தாஸ்தாவேஜுகளைப் பற்றி இப்போது கவனிப்போம்.

இப்புதுமையின் நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் வரைபடங்கள் ( Paintings ) இருப்பதாக சரித்திர ஆசிரியர் போலிடோரஸ் கூறியுள்ள போதிலும் அவை நம்கைக்கு வந்து சேரவில்லை. ஆனால் பெஃல்லா தனது " லான்சியானோ நகரின் காலக்குறிப்பு " என்னும் புத்தகத்தில் அதிகாரம் 18ல் " புனித கட்டடங்களும், துறவற மடங்களும் " என்ற தலைப்பில் ( Chronology of the City of Lancino - Chapter XVIII entitled " Of Sacred Buildings and Monasteries " )பின்வருமாறு கூறுகிறார் : 1500ம் ஆண்டில் திருப்பண்டங்கள் ( நற்கருணை புதுமையின் ) வைக்கப்பட்டிருந்த புனித பிரான்சிஸின் ஆலயத்தில் கிரீக், இலத்தீன் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பழம்பெரும் ஏட்டுச் சுவடி ஒன்று இருந்தது. அதில் தான் இப்புதுமை நிகழ்ந்த விவரங்களும் அதற்கான அத்தாட்சிகளும் பொறிக்கப்பட்டிருந்தன.

16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த முக்கிய ஏட்டுச் சுவடியை இரு பேசிலியன் துறவிகள் கடத்திவிட்டனர். காரணம், இவ்விரு துறவிகளும் தங்களது சபையைச் சார்ந்த ஒரு குரு திவ்விய நற்கருணையின் பரம இரகசியத்தைச் சந்தேகித்த நிகழ்ச்சி தங்களது சபைக்கு ஒரு அவமானம் என்று கருதினர். இந்த தஸ்தாவேஜை எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. இந்நிகழ்ச்சியை இரண்டு பிரான்சிஸ்கள் சபைக்குருக்களே என்னிடம் கூறினர்.

பெஃல்லாவின் கூற்றை அப்படியே தருகிறோம். " எழுபது ஆண்டுகளுக்கு முன் அதிசங், மாஸ்டர் அன்டோனியோ ஸ்கார்பா, சங். ஆஞ்சலோ ஆகிய இரு குருக்களும் புனித பிரான்சிஸ் மடத்தில் இருந்த காலத்தில், இரு பேசிலியன் துறவிகள் இம்மடத்துக்கு வந்திருந்தனர். ஒரு நாள் மாலை, மேற்கூறிய முக்கிய சுவடியை இந்த இரு துறவிகளும் படிக்க விரும்பியதால் அதை சங். கார்டியன் சுவாமியும், மற்றும் துறவிகளும் என்னிடம் கொடுத்தனர். மறுநாள் காலை யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், அந்த இரு துறவிகளும் அச்சுவடியுடன் மடத்தை விட்டு ஓடியேவிட்டனர். ( முன்னால் கூறப்பட்ட இரு புனித பிரான்சிஸ் சபைக் குருக்கள். )

அந்தச் சுவடியில், அப்பம் புனித தசையாகவும், இரசம் புனித இரத்தமாகவும் மாறிய புதுமை தத்ரூபமாக விளக்கப்பட்டிருந்தது. எவ்வளவோ முயன்றும், இந்த இரு துஷ்ட துறவிகளும் எங்கே சென்றனர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிற்காலத்தில் இப்புதுமையைப் பற்றி எழுதப்பட்ட தாஸ்தாவேஜுகள் நிறைய உள்ளன. அவற்றுள் சரித்திர ஆசிரியர்கள் பெஃல்லாவும், அன்டிநோரியும் கூறியுள்ள, 17 - 2 - 1574ல் எழுதப்பட்ட அத்தாட்சிப் பத்திரமும், கல்வெட்டும் முக்கியமானவை.

இப்புதுமை உண்மையாகவே நிகழ்ந்தது என்பதை உலகறியச் செய்ய மிகவும் உழைத்த அதிமேற்றிராணியார் ரொட்ரிகோஸின் தூண்டுதலால் இந்த அத்தாட்சி பத்திரமும் அவரது ஞாபகமாக இந்தக் கல்வெட்டும் எழுந்தன. இக்கல்வெட்டு 1639 முதல் 1902 வரை புதுமை நிகழ்ந்த திருப்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தபீடத்துக்கு வலது பக்கத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், புனித பிரான்சிஸ் ஆலயத்தில் அமைந்திருக்கும் இக்கல்வெட்டில் " இந்தப் புதுமை கி.பி. 700ம் ஆண்டுவாக்கில் நிகழ்ந்தது " எனத் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டு வாசகத்தின் முழுப்பகுதியும் இதோ :

" சுமார் கி.பி. 700ம் ஆண்டுவாக்கில் அப்போது ' புனித லெகோன்ஷியான் ஆலயம் ' என்று அழைக்கப்பட்ட இத்தேவாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய புனித பேசில் சபைக்குரு வசீகரம் செய்யப்படும் அப்பம் கிறீஸ்துவின் சரீரமாகவும், இரசம் திரு இரத்தமாகவும் மாறுகிறதா என்று சந்தேகம் கொண்டார். அன்று அவர் பலிப்பூசையில் வசீகர வார்த்தைகளைச் சொன்னதும் அப்பம் திருச்சரீரமாகவும், இரசம் திரு இரத்தமாகவும் மாறிய அதிசயத்தைக் கண்டார். முதலில் பீடத்தின் அருகில் நின்றவர்களுக்கும் பிறகு எல்லா மக்களுக்கும் இந்தப் புதுமை நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

இன்றும் அது திருச்சதையாக ஒரே துண்டாகவும் ஐந்து துண்டுகளாக உறைந்த இரத்தமாகவும் காட்சியளிக்கிறது. இவை, கியாவான்னி பிரான்கிஸ்கோ வால்செக்கா தனது செலவில் அன்று கட்டிய பீடத்தில் அப்படியே இருக்கிறது.

இதுவும் தவிர பெஃல்லா இன்னொரு நீண்ட எழுத்துச் சுவடியும் விட்டுச் சென்றிருக்கின்றார். அதில் இப்புதுமை விளக்கப்பட்டிருந்தது. அது பிரனாஸன்னாவிலுள்ள தேவ அன்னை ஆலயத்தில் 1500ம் ஆண்டு ஆரம்பத்தில் வைக்கப்பட்டு யாவராலும் வாசிக்கப்பட்டது. இப்புதுமையின் மகத்துவம் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் வேறு இடங்களிலும் பரவியிருந்தது என்பதை இது காட்டுகிறது.

பெய்ட்ரோ ரிடோல்பி என்னும் சரித்திர ஆசிரியர் " செராபிக் சபையின் சரித்திரம் " என்னு நூலிலும் ( 1586ல் ), மடாதிபதி பாஸிசெல்லி " கிறீஸ்தவ ஐரோப்பாவில் பயணங்கள் " என்னும் நூலிலும் அருட்திரு உகெல்லி " இத்தாலியாசாக்ரா " என்னும் நூலிலும் இப்புதுமையை விவரித்துள்ளனர்.

மேலே குறிப்பிட்ட பிந்திய புத்தக ஆசிரியர்கள் இருவரும் இப்புதுமை 8-ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

 

Next Page