புனித லெகான்ஸியன் ஆலயத்திலும் அதில் பாதுகாக்கப்படும் புதுமையின் திருப்பண்டங்களிலும் காலப்போக்கில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகள் :
12ம் நூற்றாண்டின் இறுதியில் பேசிலியன் துறவிகள் இப்பகுதியை விட்டு வெளியேறியதும் புனித லெகான்சியன் ஆலயமும் அவர்களால் கைவிடப்பட்டது. சரித்திர ஆசிரியர்கள் ரினால்டியும், உகல்லியும் எழுதியிருப்பது போல், அதன் பின் புனித ஆசீர்வாதப்பர் சபைக் குருக்கள் இவ்வாலயத்தையும் துறவற மடத்தையும் கைக்கொண்டு ' வெனெரெ ' பட்டணத்து புனிதஜான் துறவற மடத்தின் அதிகாரத்தின் கீழ்க்கொண்டு வந்தனர். ஆனால், புனித ஆசீர்வாதப்பர் சபையினர் ஐம்பது ஆண்டுகள் மட்டுமே அங்கிருந்தனர்.
ஏனெனில் லான்சியானோ அமைந்துள்ள சீட்டி மறைமாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்ற ' லாண்டல்போ ' என்னும் மறை ஆயரின் செல்வாக்கைப் பயன்படுத்தி 1252லேயே " பிரையர்ஸ் மைனர் கன்வென்ஷீயல் " குருக்கள் இவ்வாலயத்தில் பணிபுரிய ஆரம்பித்துவிட்டனர். இந்தச் சலுகை 1252ம் ஆண்டு 4ம் இன்னோஸன்ட் பாப்பிறை 9வது ஆண்டில் பிறக்கப்பட்ட ஆணையில் காணக்கிடக்கிறது.
புனித ஆசீர்வாத சபையினர் இப்பகுதியில் அடிக்கடி பூமி அதிர்ச்சிகள் நிகழ்ந்ததால் முன்பு இப்பகுதியை காலி செய்து இருப்பதாகத் தெரிகிறது. இப்புதிய சபையினரின் ஆளுகை துவங்கும் போதும் கட்டிடங்கள் மிகவும் உடைந்த நிலையில் இருந்தது.
1258ல் பரான்சிஸ்கன் சபையினர் அழிந்த கிடந்த பழைய ஆலயம் துறவறமடம் இவற்றின் மேல் புதிய ஆலயம் ஒன்றும் எழுப்பினர். அப்போது நிலவிய புதுக்கட்டிட கலைகளின்பாலுள்ள ஆர்வம் இப்புதிய கட்டடங்கள் கட்டக் காரணமாக இருந்தன. ஆகவே, பழைய புனித லெகான்ஸியானின் ஆலயத்தில் மேல் எழும்பியுள்ள புனித பிரான்சிஸின் புனித கோயில், கடந்த 714 ஆண்டுகளாக நற்கருணைப் புதுமைப் பொருட்களைப் பாதுகாத்து வருகிறது.
இந்தப் ' பிரயர்கள் ' புனித லெகான்சியன் ஆலயத்தின் பொறுப்பேற்ற போது நற்கருனைப் புதுமைப் பண்டங்களின் பேரில் பக்தி மேலோங்கி நின்றது. அதலால், அவற்றைப் புதிய ஆலயத்தின் மேற்பகுதிக்கு மாற்றினர்.
புதிய நற்கருணைத் திருப்பண்டங்களின் காவலர்களாக இருந்த " கன்வென்ஷியல்ஸ் " குருக்களின் நீண்ட சரித்திரத்திலிருந்து ஒரு சம்பவத்தை ஈண்டு கொணர்தல் நலமென நினைக்கின்றோம்.
இன்றைய புனித பிரான்சிஸின் புதிய ஆலயத்தின் கீழ் இருக்கும் புனித லெகான்சியோனின் பழைய ஆலயத்தை " ரக்கமாண்டாட்டி " என்னும் " லான்ஸியானிஷ் குழுவினர் " என்னும் சபையினர் கைப்பற்ற முயன்ற போது 1666ல் அதைப் " கன்வென்ஷியல்ஸ் " சபையினர் முறியடிக்க வேண்டியிருந்தது. ஆயர் - மறைபோதகர் திருக்கூட்டத்தைச் சேர்ந்த கர்தினால் கியானட்டின் தலையீட்டால் 1666லேயே " கன்வென்ஷியல்ஸ் " சபையினர் இவ்வழக்கை வென்றனர்.
புதுமை நிறைந்த பழைய கோவிலும் அதன் மேல் எழுந்துள்ள புனித பிரான்சிஸ் ஆலயம் தங்களது உடமை என்பதை நிலைநிறுத்த ' நோட்டரி ' யான சீமோன் பெஸ்ஜியோவிடமிருந்து ஒரு அதிகாரப் பூர்வமான அறிக்கைப் பிரகடனத்தைப் பெற்றனர். இந்தப் பிரகடனம் இன்றும் லான்ஸியானோவின் நோட்டரி அறையில் காணக்கிடக்கிறது.
இவ்வாறு இத் தேவாலயத்தைப் பராமரிக்கப் பல சபையினருக்கிடையில் சட்ட வழக்குகள், பிரச்சனைகள் எழுந்ததிலிருந்து, இங்கு நிகழ்ந்த மாபெரும் நற்கருணைப் புதுமையால், உயர்ந்த இத்தேவாலயத்தின் மகிமை தானே இவற்றிற்குக் காரணம் ந்ன்பது விளங்கவில்லையா?
பல சரித்திர நிகழ்ச்சிகளின் விளைவாக குறிப்பாக நெப்போலியனின் அடக்குமுறைகளின் காரணமாக 1809ல் பிரான்சிஸ்கன் சபையினர் லான்சியானோவை விட்டுத் துரத்தப்பட்டனர். ஆனால் சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு லான்ஸியானோவின் அதிமேற்றிராணியார் மிக்கிலியோரினியின் அழைத்தலின் பேரில் இவர்கள் அதே தேவாலயத்தில் 1953ம் ஆண்டு ஜூன் 21ல் நுழைந்தனர்.
| Next Page |