Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

   

திவ்ய நற்கருணைத் திருப்பண்டங்கள் பாதுகாக்கப்பட்ட முறைகளும், இடங்களும் :

சரித்திர ஆசிரியர் பெல்லினி, நற்கருணைத் திருப்பண்டங்கள் 1258ல் புனித பிரான்சிஸின் புதிய ஆலயத்தில் வைக்கப்படும் முன், ஐந்து நூற்றாண்டுகளாகப் புனித லெகான்சியான் பழைய ஆலயத்தில் ஒரு தந்தப்பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

1258 முதல் திருப்பண்டங்கள் முக்கிய பீடத்தின் வலப்புறத்தில் ஒரு சிறப்புப்பேழையில் வைக்கப்பட்டிருந்ததாக Guardian of St. Francis ( " புனித பிரான்சிஸின் காவலன் " ) என்னும் நூலில் காண்கிறோம். இதை 1723ல் லான்சியானோவின் பேராயர் அண்டோனியோ பேட்டர்னா ஆண்டகையும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.

1566ல் இத்திருப்பண்டங்கள் மறவான ஒரு சிறு பீடத்தில், அப்போது ' அப்ரூஸி ' கடற்கரை வரை அடிக்கடி போர் தொடுத்து வந்த துருக்கியரிடமிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்று ' அன்டிநோரி ' யின் அதிகாரபூர்வமான தஸ்தாவேஜு ஒன்று கூறுகின்றது.

இச்சிறுபீடம் இன்றும் உள்ளது. இதே தஸ்தாவேஜுலிருந்து, துருக்கியரின் ஆபத்து நீங்கியதும் 1636ல் இத்திருப்பண்டங்கள் மேற்சொன்ன சிறுபீடத்திலிருந்து மாற்றப்பட்டு, அன்டோனியோ வால் செக்கா என்பவர் தனது செலவில் கட்டிய பொருத்தமான சிறுபீடத்தில் வைக்கப்பட்டது. அன்டோனியோ மேலும் கூறுகிறார் :

" இத்திருப்பண்டங்கள் 4 சாவிகளால் பூட்டப்பட்டிருந்தன. இரும்புப் பெட்டியின் சாவி நகரத்தின் பெயரால் நகரத்தந்தையிடம் ( மேயர் ) இருந்தது. இரண்டாவது சாவி மடத்தின் பெயரால் சங். கார்டியன் சுவாமியிடம் இருந்தது. மூன்றாவது சாவி - மரப்பெட்டியின் சாவி - வால் செக்காவின் உறவினரான லியோன்ரிக்ஸியோ என்பவரிடம் இருந்தது. நான்காவது சாவி - இரும்புக்கதவின் சாவி - உபகாரியான வால் செக்காவின் கருத்துக்களுக்காகத் திருப்பலிகள் ஒப்புக்கொடுப்பதற்கு வசதியாக, மடத்தின் சக்கிரீஸிஸ்தனிடம் இருந்தது "

சங். கார்டியன் சுவாமியிடமிருந்த சாவி - அது எதைப் பூட்டியது என்று தெளிவாகக் குறிப்பிடப்படாவிட்டாலும் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த திருச்சரீரத்தையும் திருஇரத்தத்தையும் கொண்டிருந்த சிறப்புப் பேழைக்குரிய சாவியாக இருந்தது என்று தோன்றுகிறது. இப்பேழை மரப்பெட்டியினுள் இருந்ததாகத் தெரிகிறது. இக்கூற்று 1693ல் லான்சியானோவைச் சந்தித்த மடாதிபதி பாஸி செல்லி என்பவரது கடிதங்களிலிருந்து ( Family Letters ) உறுதி செய்யப்படுகிறது. அவரது கடிதங்களிலிருந்து கீழ்க்கண்ட உண்மைகள் விளங்குகின்றன.

" கன்வென்ஷியல்ஸ் குருக்களின் அதிகாரத்திலுள்ள சிறுபீடத்தின் வலப்புறத்தில் மரப்பலகைகளால் மூடப்பட்ட இரு வெள்ளிப் பெட்டகங்களிலுள்ள ஒரு தட்டில் அவநம்பிக்கைப் பட்ட பேசிலியன் துறவியின் திருப்பலியில் திருச்சரீரமாகவும், திருஇரத்தமாகவும் மாறிய திருப்பண்டங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. "

வால் செக்காவினால் கட்டப்பட்ட சிறுபீடம் பற்றாமல் போனதால் 1902ம் ஆண்டு அக்டோபர் மாதம் புகழ் பெற்ற, லான்சியானோவின் பேராயர் பெட்ரார்காவின் ஆளுகையில், லான்சியானோவின் மக்கள் அளித்த பெரும் நிதியுதவிகளால் கட்டிடக்கலைஞன் பிலிப்போ செர்ஜியோ கோமாவால் அந்த இடத்தில் வேறு ஒரு அழகிய பீடம் கட்டப்பட்டது. அப்ரூஸி பகுதியிலுள்ள ஐந்து ஆயர்களால், எண்ணற்ற மக்கல் திரள, இப்புதுப்பீடம் அர்ப்பணம் ( மந்திரிக்க ) செய்யப்பட்டது. கவிஞர் செஸார் டி டிட்டா என்பவர், இப்புதுமையின் வரலாறு பதிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றை பீடத்தின் பின்புறம் பதித்தார். இக்கல்வெட்டு, சமீபத்தில் தான் எடுக்கப்பட்டது.

மீண்டும் 1920ல் லான்சியானா மக்கள் தங்களது தாராள நன்கொடைகளால், திருப்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த பேழைக்கு இட்டுச்செல்லும் பளிங்கியாலான படிக்கட்டுக்களை அமைத்தனர். அத்துடன் கலையழகு நிறைந்த வேலைப்பாடுகளையும் செய்தனர்.

1958 டிசம்பரில், பீடத்தின் பின்பகுதியில் முன்புறமாக திறப்பு ஒன்று ஏற்படுத்தி புதுப்படிக்கட்டு ஒன்றும் நிறுவி இதனால் திருப் பேழைக்குப் போவதை எளிதாக்கினர்.

திருச்சதை தங்கமுலாம் பூசிய வெள்ளி ( வளைவு ) பாத்திரம் ஒன்றில் இரண்டு படிவங்களுக்கு ( Crystal ) மத்தியில் வைக்கப் பட்டுள்ளது. 1713 ஏப்ரல் 13ல் லான்சியானோவின் முக்கிய நோட்டரியாக ஜிலியோ போரேயும் மேயராக கியோவானி வரினி ரியல்டோவும் இருந்த போது அழகிய சிற்ப வேலைப்பாடுகளமைந்த பேழையினுள் இந்த வெள்ளிப்பாத்திரம் வைக்கப்பட்டது. இன்றும் அதே கிண்ணத்தில் தான் இருக்கிறது. திரு இரத்தம், தூயபடிவத்தாலான கிண்ணத்தில் மூடியுடன் பேழையடியில் ஒட்டிவைக்கப்பட்டுள்ளது.

15 செ.மீ. உயரமும் 8 செ.மீ அகலமுமுள்ள இந்த கிண்ணம் புதுமை நடந்த திருப்பலியில் பேசிலியன் துறவி உபயோகப்ப்டுத்தியது தான் என்று சிலர் கூறுகின்றனர். இந்த அமைப்பு 63 செ.மீ உயரமும் 25 செ.மீ விட்டமும் கொண்டதாக இருக்கிறது. தங்கத்தாலான வளைவு ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் Tantum Ergo Sacramentum - Veneremur Cernui என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளன. கானன் டொமென்ஸியோ கோலி என்பவர் இவ்வேலைப்பாட்டை செய்ததாகத் தெரிகிறது. கீழ்வரும் வாசகமும் காணக்கிடைக்கிறது.

" அவிசுவாசம் கொண்ட குருவானவருக்கு வெளிப்படுத்தப்பட்ட மாபெரும் விசுவாச பரம இரகசியத்தின் நினைவாக டொமென்ஸியோ கோலி - தனது சொந்த செலவில் இதை 1713ல் செய்தார். "

 

Next Page