லான்சியானோவின் திருப்பண்டங்கள் - கடந்த நூற்றாண்டுகளில் திருச்சபையின் அதிகார பூர்வமான கொள்கை :
திருப்பண்டங்களில் மட்டில் லான்சியானோ மக்களுக்குள்ள அபார பக்தி மிகப்பழமையானது. ஒவ்வொரு ஆண்டுக்கும் மிகச்சிறப்புடன் விழாக் கொண்டாடப்பட்டு வருகிறது. அக்கொண்டாட்டங்களில் பேராயர்கள், ஆயர்களுடன், ஞானத்தந்தையருக்கடுத்தாப் போல் மதிக்கப்பட்டு வந்த நகரத்தந்தையும் ( மேயர் ) பங்கெடுத்து வந்தனர்.
1636ல் பிரான்சிஸ்கோ வால் செக்காவால் கட்டப்பட்ட சிற்றாலய பீடம். 1751 - அக்டோபர் 14ல் பாப்பிறை 14ம் ஆசீர்வாதப்பரால் " சிறப்பு நிலை பீடம் " என பிரகடனப்படுத்தப்பட்டதாக அதன் மேல் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டிலிருந்து அறிகிறோம்.
அக்டோபர் மாதம் கடைசி ஞாயிறன்று வருடந்தோறும் கொண்டாடப்படும் இத்திருப்பண்டங்களின் திருவிழாவிற்கு முந்திய எட்டுத்தினங்களில் இத்தேவாலயத்தைச் சந்திப்பவர்களுக்கு ஒரு பரிபூரண பலன் அருளும் சலுகையை லான்சியானோவின் பேராயரான பெட்ரார்கா 1887ல் 13ம் சிங்கராயர் பாப்புவிடமிருந்து பெற்றார்.
எல்லாவற்றிற்க்கும் மேலாக, இம்மாபெரும் புதுமையினால் லான்சியானோ அடைந்த முக்கியத்துவத்தையும் புகழையும் முன்னிட்டு, அப்ரூஸி பகுதியில் 1921 செப்டம்பர் 23 - 25 தேதிகளில் நிகழ்ந்த முதல் நற்கருணை மாநாட்டு இடமாக லான்சியானோ தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த மாநாட்டில், பாப்பிறையின் தூதுவரான கர்தினால் ஆரஸ்ட் ஜியார்ஜ் தலைமை தாங்கினார்.
இதற்குப் பின்னர் இன்றுவரை, அத்தலத்தில் நடக்கும் ஒவ்வொரு நற்கருணைத் திருப்பண்டங்களின் விழாக்களிலும் திருச்சபையின் ஞான அதிகாரிகள் முக்கிய பங்கெடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள்.
யாவற்றிற்கும் மேலாக, லான்சியானோவின் புனித பிரான்சிஸ் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள திருப்பண்டங்கள் அங்கு நிகழ்ந்த பெரும் புதுமையால் ஏற்பட்டவை என்று திருச்சபை அங்கீகாரம் அளித்து ஊர்ஜிதப்படுத்தி இருப்பதிலிருந்து அதன் ( திருச்சபையின் ) அதிகார பூர்வமான நிலைமை தெளிவாக விளங்குகிறது.
1574 பிப்ரவரி 17ம் தேதி மான்சிஞ்ஞோர் ரொட்ரிகுஸ் அறிவித்த முதல் பிரகடனம் இவ்வாலயத்தில் பதிக்கப்பட்டுள்ள பளிங்குக் கல்வெட்டில் காணக்கிடக்கிறது. இவ்வாசகத்தில், உறைந்த திரு இரத்தத்தின் 5 துண்டுகளும் சேர்ந்து அவற்றின் பாரமும் அவற்றின் ஒவ்வொரு துண்டின் பாரமும் சமமாக இருந்தன என்று மக்கள் முன்னிலையில் நிரூபிக்கப்பட்டதாகவும் காண்கிறோம்.
இயற்கை நியதிக்கு மேற்பட்ட இப்புதுமை திருச்சபையின் அதிகார பூர்வமான பல புதுமைகளை ஒத்ததால், இப்புதுமையைப் பற்றி மக்களின் நம்பிக்கை பலப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தப் புதுமையான காரியம் பின்னால் அறிவிக்கப்பட்ட பிரகடனங்களில் சொல்லப்படவில்லை.
1637ல் திருப்பண்டங்கள் வால் செக்கா பீடத்திற்கு மாற்றப்பட்ட போது புனித பிரான்சிஸ் ஆலயத்தின் தலைமைக்குருவாய் இருந்த செராபினாடா ஸ்கான்னா மக்கள் முன்னிலையில் இரண்டாவது அதிகார பூர்வ பிரகடனத்தை அறிக்கை செய்தார்.
3 - வது பிரகடனம், 1770ம் ஆண்டு அக்டோபர் 23ல் மான்சிஞ்ஞோர் ஜெர்வாசோனால் அறிவிக்கப்பட்டது.
4 - வது பிரகடனம், அதாவது 1970ல் கடுமையான விஞ்ஞான ரீதி ஆராய்ச்சிகளுக்குப் பின் வெளியிடப்பட்ட பிரகடனத்துக்கு முன்பு வெளியானது - 1886ல் அறிவிக்கப்பட்டது. அச்சமயம், லான்சியானோவின் பேராயர் பெட்ரார்கா, திருச்சபையின் உயர் அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் கமிஷனுடன் சேர்ந்து திரு இரத்தத்தின் கிண்ணத்தின் மேல் 1770ல் வைக்கப்பட்டிருந்த அதிகாரபூர்வ முத்திரைகளையும் ( Seals ) மூடியுருந்த பட்டுக்கயிறுகளையும் அகற்றினார். அப்போது திருச்சரீரத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த முத்திரை ( Seal ) அகற்றாமலே, திருச்சரீரத்தின் மேல் சில அப்பத்துண்டுகள் தெளிவாகக் காணக்கிடந்தன என்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
| Next Page |