என்றும் நீங்காமல் நினைவில் நிற்கட்டும் :
அன்சானியோ என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய லான்சியானோ, அப்ரூஸி பகுதியில் வருடம் இரு முறை நடந்த சந்தைகளால் பேர் போன நகரம் - ஒரு காலத்தில் சந்நிதி - பெலிக்னி நாடுகளின் பகுதியாக இருந்தது. கடலிலிருந்தும் சாங்ரோ நதியிலிருந்தும் 4 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
இன்று புனித பிரான்சிஸ் மடம் என்று அழைக்கப்படும் துறவற மடம், கி. பி. 700ம் ஆண்டு வாக்கில் புனித லெகான்சியான் மடம் என்று அழைக்கப்பட்டு, புனித பேசில் சபைத் துறவிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அங்கு வாழ்ந்த பேசில் சபைத்துறவி ஒருவர் உலகளவில் சிறந்திருந்தாலும் ஞான அறிவில் குன்றி, விசுவாச வாழ்வில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
அவர் வசீகரிக்கப்படும் அப்பமும், ரசமும் கிறீஸ்துவின் சரீரமாக இரத்தமும் ஆக மாறுமா என்று சந்தேகிக்கத் தொடங்கினார்.
இருப்பினும், அவர் தன்னை இந்த இக்கட்டான குழப்பத்தில் ஒளி தந்து வழிநடத்த வேண்டுமென இடையறாது வேண்டிவந்தார். அதன் பயனாக, இரக்கத்தின் தேவன், அன்று அப்போஸ்தலரான புனித தோமையாரின் சந்தேகத்தைப் போக்கியதைப்போல, இத்துறவியின் குழப்பத்தையும் போக்கி அவருக்கு மன ஆறுதல் அளிக்கத் திருவுளமானார்.
அச்சமயம் ஒரு நாள் காலையில் திருப்பலி நிறைவேற்றுகையில் வசீகரம் முடிந்த வேளையில் மீண்டும் அந்த சந்தேகத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில், அப்பம் கிறீஸ்துவின் திருச்சரீரமாகவும், இரசம் திரு இரத்தமாகவும் மாறியிருப்பதை தன் கண்ணால் கண்டார்.
இம்மாபெரும் அதிசயத்தைக் கண்டு பயத்தினாலும் குழப்பத்தினாலும் கலங்கி, ஏதோ காட்சி கண்டவர் போல் சற்று நேரம் அசையாது நின்றார். பின்னர் இப்புதுமையைக் கண்ட இதய மகிழ்ச்சியால், முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட, அங்கிருந்தவர்களை நோக்கிக் கூறினார். " அவிசுவாசங்கொண்ட என்னை விசுவாசத்தில் திடப்படுத்த மாபெரும் இத்தேவதிரவிய அனுமானத்தில் தன்னை வெளிப்படுத்த சித்தங் கொண்ட இறைவனின் மாபெரும் புதுமையைக் காணப் பாக்கியம் பெற்றவர்களே! வாருங்கள், நம் மிக அண்மையில் இருக்கும் நம் இறைவனை ஆராதியுங்கள். "
" அன்புக் கிறீஸ்துவின் திருச்சரீரத்தையும், திருஇரத்தத்தையும் உங்கள் கண்களாலே பாருங்கள்! " இதைக்கேட்டு பீடத்தை நோக்கி ஓடிய மக்கள், இவ்வதிசயத்தைக் கண்ணால் கண்டதும், மிகவும் பயந்தவர்களாய், கண்களில் நீர் சொட்ட " ஆண்டவரே இரக்கமாயிரும் " எனக் கத்தலாயினர்.
அரிய, மிகப்பெரிய இப்புதுமையைப் பற்றிப் பட்டணமெங்கும் காட்டுத்தீ போல் பரவவே, இளைஞரும் வயோதிகரும் மக்கள் அனைவரும் கோவிலில் வந்து கூடினர். கூடியிருந்த மக்களில் சிலர் இறைவனின் இரக்கத்தை இறைஞ்சினர், பலர் தங்களின் மார்பில் அறைந்து கொண்டு தாங்கள் தவறு இழைத்தவர்கள் என்று தங்களையே நொந்து கொண்டனர்.
மற்றும் பலர் தாங்கள் இப்பெரும் பொக்கிஷத்தைப் - புதுமையை - பார்க்க தகுதியற்றவர்கள் என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர். கடைசியில், சிலர், அளவற்ற தமது தெய்வீகத் தன்மையை அன்பின் இறைவன் நாம் கண்டுணரும் அளவுக்கு இப்புதுமை வாயிலாக வெளிப்படுத்தியமைக்கு அமைதியாக இறைவனைப் புகழ்ந்தனர்.
இந்த பரபரப்புக் காட்சிகள் அடங்கியதும், இறைவனுக்குத்தக்க நன்றியறிதல்கள் கூறிய பின், நகரத்தின் தலைவர்கள் தந்தத்தாலான அழகிய பேழை ஒன்றைத் தயார் செய்து அதில் திருப்பண்டங்களை வைத்தனர். அதன் பின் வெள்ளித் தட்டு ஒன்றிலும் அதன் பிறகு விலையுயர்ந்த படிகம் " டி ரோக்காவிலும் வைக்கப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
திரு இரத்தம், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபட்ட ஐந்து துண்டுகளாக இருக்கிறது. எந்த அவிசுவாசியையும் ( நாஸ்தீகனையும் ) திணறடிக்கும் இன்னொரு புதுமையான அம்சம் என்னவெனில், பேராயர் அன்டோனியோ டி மிக்கேல் அவர்களிடமிருந்து கொண்டுவரப்பட்ட தராசில் நிறுத்துப் பார்க்கையில் இரு தட்டுகளிலும் திரு இரத்தத்தின் துண்டுகளை எந்த முறையில் வைத்து நிறுத்தாலும் அவை சமமான எடையைக் காட்டின.
மாபெரும் அற்புதமாய் இத்திருப்பண்டங்கள் உயிர்த்த பெருநாளுக்குப் பின்வரும் இரண்டாம் நாள் பிற்பகலில் விரும்புவோர் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.
கியாவானி போட்டரோ என்பவர் ( இப்புதுமையின் சரித்திரத்தை நன்கு அறியாதவர் ) " உலக ரிப்போர்ட்டுகள் - முதல் புத்தகம் " என்னும் தனது புத்தகத்தில் கூறுகிறார் :
லான்சியானோவில், ஒரு யூதன் கத்தியால் நற்கருணையைத் தாக்கும் போது அது திருச்சரீரமாகவும் திரு இரத்தமாகவும் மாறியது. அந்தத் திருப்பண்டங்கள் லான்சியானோவில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், கிறீஸ்து இதே திருப்பண்டங்களால் வேறு எங்கும் புதுமைகள் புரிந்ததாகத் தெரியவில்லை.
1566ல் துருக்கியர்கள் நேப்பிள்ஸ் அரசைத் தோற்கடித்து, சுற்றியிருந்த நகரங்களையும் ஊர்களையும் சுட்டு சாம்பலாக்கினர். இறைவனின்பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் நம்பிக்கையை இழந்த " மைனர் கன்வென்ஷீயல்ஸ் " சபையைச் சேர்ந்த அருட்திடு கியாவானி அன்டோனியா டி மாஸ் டிரே ரென்ஸோவும் இன்னும் சில இளைஞரும் ஆகஸ்டு முதல் தேதியன்று நகரை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
அவர், அவ்விதம் ஓடுகையில், துருக்கியரின் கையில் விழக்கூடாது என்று எண்ணி நற்கருணைத் திருப்பண்டங்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றார். இரவெல்லாம் வேகமாக நடந்துதான் பட்டணத்தை விட்டு வெகுதூரம் வந்திருப்பதாகக் காலையில் எண்ணிக்கொண்டிருக்கும் போது, அவர் பட்டணத்தை விட்டு வெளியேறிய அதே கதவருகில் நிற்பதைக் கண்டதும், தனது விசுவாசக் குறைவை நொந்து, தம்மவர்க்கு இவ்வாறு கூறினார்.
" தோழர்களே ! நாம் செய்த தவறு தமது அதிஷ்டத்தால் தான் என்று எண்ணாதீர்கள், யாவும் கண்டுணர முடியாத இறைவனின் பராமரிப்புத் திட்டத்தாலேயே நிகழ்கின்றது. ஆதலால், இனி நாம் இந்நகரை கைவிட்டு ஓடாதவாறு இங்கேயே இருப்போமாக, நாம் கிறீஸ்துவின் உண்மையான போர் வீரர்கள். தேவையானால் நம் உயிரை முதலாய்க் கிறீஸ்துவுக்காகக் கொடுப்போம். "
இவ்வித உற்சாக வார்த்தைகளால் கோழைகளாக இருந்தவர்கள் வீரச்சிங்கங்கள் போல் மாறி, தங்கள் பட்டணத்தை காப்பதாக உறுதி கொண்டு பட்டணத்துக்குள் நுழைந்தனர். அன்றொருநாள் மூன்று யூத இளைஞரைக் கொழுந்து விட்டெரிந்த தீச்சுவாலையிலிருந்து காத்த இறைவன், நற்கருணைத் திருப்பண்டங்களைப் பாதுகாக்க தங்கள் உயிரையே துச்சமென மதித்த இந்த நல்ல ஊழியர்களையும் எதிரியின் கையிலிருந்து காத்தருளினார்.
தேவ தூஷணம் சொல்லும் யூதரின் நாக்கு அமைதியாக இருக்கட்டும், நம்பாதவர்களின் கடின இதயங்கள் இளகட்டும், கிறீஸ்தவர்கள் தாங்கள் விசுவசிப்பதைத் தங்கள் ஊணக் கண்களால் காணும் பேற்றைப் பெற்றால் மகிழட்டும்.
எல்லோரையும் விட, அனைத்துப் படைப்புப் பொருட்களாலும் கண்டுணர முடியாதவரின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் தன்னகத்தே கொண்ட இத்தாலி நாடு அகமகிழ்ந்து ஆர்ப்பரிப்பதாக. எல்லாம் வல்ல இறைவனை திருச்சபையோடு சேர்ந்து ஆராதிப்பதாக.
நம்மிடையே இறைவன் குடி கொண்டிருப்பதை போல, வேறெந்த நாட்டிலும் நம் இறைவன் குடி கொள்ளவில்லை. ஆதலால், இறைவன் போற்றப்படுவாராக - ஆமென்
இப்புதுமை நிகழ்ச்சிகள் வெகு தெளிவாக அருட்திரு செபாஸ்டியானோ டி டினால்டிஸ் அவர்களின் " புனிதர்களின் பூ " என்னும் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
| Next Page |