தேவதாயின் நற்கிரியைகளும் அவள் தேவாலயத்தில்
ஒப்புக் கொடுக்கப்பட்ட வரலாறும் :
மரியாள் அடிக்கடி தனிமையில் சர்வ நிஷ்டையில் தியானயோகம் செய்கையில் மனிதரின் பாவங்களை நினைத்து
அழுவாள். ஏழைகளிடமும் பாவிகளிடமும் அதிக இரக்கம் காட்டுவாள். அவள் இரண்டு வயதாக இருக்கும் போதே தனக்குக் கிடைப்பவைகளில்
மிச்சம் பிடித்து பிச்சை கொடுப்பாள். இறை அருளால் சகல ஞான அறிவுகளும் அவள் ஆத்துமத்தில் முழுநிறைவாய் பொழியப்பட்டிருந்தும் கூட;
தனக்கு வாசிக்க கற்றுக் கொடுக்க வருபவர்களுக்கு கீழ்ப்படிந்து வாசிப்பாள். தன்னை தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டுமென்பதை தன்
பெற்றோர் உணரும் படியாய் இறைவனை வேண்டுவாள். அவளது வேண்டுதலை இறைவன் கேட்டருளினார். அவர்கள் உள்ளத்தில் அவர்
பொழிந்த ஞான ஒளிக் கதிர்களால் உந்தப்பட்டு பாலகியை இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப் புறப்பட்டனர். சுவக்கீனும் அன்னம்மாளும் அத் திருக்
குழந்தையானவளை கரங்களில் ஏந்திக் கொண்டு நசரேத்தை விட்டு ஜெருசலேம் பட்டணத்துக்கு வருகையில் சம்மனசுகள் அணியணியாய் எதிரே
சென்று நாதம் பொருந்திய பாடல்களைப் பாடிக் கொண்டு சென்றனர்.
தேவாலயத்துக்குச் சென்றதும் ஓர் அற்புதக் குரல் தோன்றி, " நாம் தெரிந்து கொண்ட புனிதமானவளே வா! நமது
ஆலயத்தில் அதிவணக்கத்துக்குரிய பலியை நமக்கு ஒப்புக் கொடு " என்று கூறியது. உடனே யூதா, லேவி கோத்திரங்களின் பெண்கள், ஞானத்திலும்
விண்ணக வரங்களிலும் நிறைந்து இறை செல்வத்தில் வளர்ந்த அத் திருக்குழந்தையை ஒரு மாடிக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். அந்த மாடி
பதினைந்து படிகளைக் கொண்டது. முதற்படியிலேயே அவளைக் கையேற்க ஒரு குருவானவர் வந்தார். அவள் தன் பெற்றோரைப் பார்த்து ஆசிர்
வாதங் கேட்டாள். அவர்கள் கண்ணீர் மல்க ஆசிர்வாதம் கொடுத்துச் சென்றனர். குழந்தையானவள் மிகுந்த பணிவு, அடக்கத்துடன் பதினைந்து
படிகளையும் தானே கடந்தாள். சிமியோன் என்னும் பெரிய குருவானவர் அங்கு வந்து அன்னம்மாள் என்னும் தீர்க்கதரிசினியிடம் அக்குழந்தையை
ஒப்புவித்தார்.
தீர்க்கதரிசினியான அன்னம்மாளிடம் ஒப்புவிக்கப்பட்ட திருக்குழந்தை அவளின் பாதங்களை வணங்கி தனக்கு
வேண்டியவற்றைக் கற்பிக்க அவளை மன்றாடினாள். பின்பு அவளின் வேண்டுதலின் படி அங்கிருந்த மற்றப் பெண்களை மனமுருகி தனித்தனியே
கட்டித் தழுவி முத்தமிட்டாள். பின் சாஷ்டாங்கமாக விழுந்து மாடியின் தரையை முத்தி செய்து, இறைவன் தனக்குச் செய்த பேருபகாரங்களுக்காக
நன்றித்துதி செலுத்தினாள். பின் தனது பன்னிரண்டு பிரதான சம்மனசுகளிடம் தன்னைப் பிரிந்து துயருடன் செல்லும் பெற்றோருக்கு ஆறுதலாகப்
போகும்படி சொன்னாள். அவர்களும் அவ்வாறே சென்றனர்.
அவளை விண்ணகத்துக்குத் தூக்கிக் கொண்டு வரும்படி அவளுக்கு காவலாயிருந்த அறுபது பக்திச் சுவாலகர்களுக்கு
இறைவன் கட்டளை இட்டார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அப்போது அவளுக்கு நாதம் பொருந்திய இறையருட் பரவசம் கிடைத்தது.
அவளும் இறைவனுக்குள் மூழ்கிப் போனாள். அவ்வேளை அவள் சாஷ்டாங்கமாக விழுந்து மிகவும் பக்தியோடு " நான் இறையன்பின் நிமித்தம்
துன்பப்படவும், ஏழ்மையை அனுசரிக்கவும், கற்போடிருக்கவும், கீழ்ப்படியவும், உலகியற் பற்றின்றி வாழவும் வேண்டிய ஐந்து வரங்களையும்
எனக்கு அருள வேண்டும் என்று மன்றாடுகிறேன் " என்று இறைவனை வேண்டினாள். இறைவனும் அவைகளை ஏற்றுக்கொண்டார். உடனே அவள்
வேறோர் பரவச நிலைக்கு உள்ளாகி அழகிய சரீரமயமான தோற்றத்தைப் பெற்றாள். அப்போது சம்மனசுகள் வந்து ஞான வரப்பிரசாதங்களின்
ஒளியில் அவளது ஐம்பொறிகளை மூழ்கடித்தார்கள்.
அவளது உடலில் பேரழகு பொருந்திய பீதாம்பர ஆடையை அணிவித்தனர். பல வர்ணம்
பொருந்திய இரத்தின மயமான கவசத்தை அவளுக்கு அணிவித்தனர். இது அவளுடைய வீரத்துவமான புண்ணியங்களின் அடையாளமாகும்.
அவளது திருக் கழுத்தில் மூவகை இரத்தின மாலைகளைப் பூட்டினர். இது இறை விசுவாசம், நம்பிக்கை, தேவசினேகம் என்பவற்றின்
அடையாளங்களாகும். திரு விரல்களில் ஒளி பொருந்திய ஏழு மோதிரங்களைப் போட்டார்கள். இது தூய ஆவியின் ஏழு கொடைகளின்
அடையாளமாகும். அவள் விண்ணக அரசி என்பதற்கு அடையாளமாக பேரரசிக்குரிய முடியைஅவளது சிரசில் பரிசுத்த திரித்துவம் சூட்டியது.
அவளது ஆடையில் பொன்மயமான சில அட்சரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. அவ்வட்சரங்களால் கூறப்படும் செய்தி " மரியாள் நித்திய பிதாவின்
மகளாகவும், தூய ஆவியின் பத்தினியாகவும், மெய்யான ஒளியின் தாயாகவும் இருக்கிறாள் " என்பதாகும். இவ்வசனத்தை சம்மனசுகள் மாத்திரம்
கண்டு பிடித்தனர்.
பின்பு இறைவன் மரியாளிடம் அவள் விரும்புவதைக் கேட்கும் படி பணித்தார். அப்போது அவள் மிகுந்த தாழ்ச்சியுடன்
" மனிதர்களை மீட்க இறைவன் தனது ஒரே மகனை அனுப்ப வேண்டுமென்றும், எனது பெற்றோர் இறையன்பில் நிலைத்து விண்ணக வரங்களைப் பெற
வேண்டுமென்றும், எளியோர்க்கு ஆறுதல் தர வேண்டுமென்றும், கடைசியாக நான் இறை சித்தப்படி நடக்க வேண்டுமென்றும் வேண்டுகிறேன்" என்றாள்.
இவை முடிந்த பின் சம்மனசுகள் முன்னர் அவள் இருந்த தேவாலயத்திலேயே அவளைக் கொண்டு போய் விட்டனர்.
பின்னர் தான் இறை சமூகத்திலே கொடுத்த வாக்குறுதியின் படி தன் தாயார் தனக்கு கொடுத்த சகலத்தையும் மடாதிபதி
ஆன பெண்ணிடம் கொடுத்து அவைகளை ஏழைகளுக்கு கொடுக்கும் படி கேட்டுக் கொண்டாள். தனக்கென்று ஒரு சாதாரண உடையையும் ஓர்
கையெழுத்துச் செபப் புத்தகத்தையும் வைத்திருந்தாள். அவளுடைய செயல்கள் அனைத்தும் பக்திச் சுவாலர்களுடைய செயல்களை விட மேலானவை
யாயும், நிறைவானவையாயும் இருந்தன. தான் செய்ய வேண்டியது இன்னதென்று தெரிவிக்கும் படி குருக்களிடத்திலும், தலைமைப் பெண்ணிடத்திலும்
முழந்தாளில் இருந்து மிகத் தாழ்ச்சியோடு கேட்டுக் கொண்டாள்.
அதற்கு பெரிய குருவான சிமியோன், " மகளே! நீ இறை வழிபாட்டுக்குச் செல்ல
வேண்டும். ஆண்டவரின் ஆலயத்தினதும், மக்களினதும் தேவைகளுக்காகவும், உலக மீட்பரின் வரவுக்காகவும் மன்றாட வேண்டும். நீ மூன்று மணி
நேரம் இளைப்பாறுவாய். அதிகாலையில் எழுந்து மூன்று மணி வரை செபம் செய்து, பின் கைத்தொழில் செய்வாய். அளவோடு உணவருந்துவாய், மடத்
தலைவியிடம் அறிவுரை கேட்பாய். நாளின் ஏனைய நேரங்களில் வேத நூல்களை வாசிப்பாய், அனைத்துச் செயல்களிலும் வணக்கமும், தாழ்ச்சியும்,
பணிவும் கொண்டிருப்பாய் " என்று அறிவுரை பகர்ந்தார். முழந்தாளில் இருந்து இவற்றைக் கேட்ட பரிசுத்த கன்னி அவரிடம் ஆசிர்வாதம் பெற்று
கரங்களை முத்தமிட்டு அவர் சொன்னபடியே நடந்தாள்.
மேலும் தலைமைப் பெண்ணிடம் தான் அங்குள்ள மற்றப் பெண்களுக்குப் பணிவிடை செய்யவும், வீடு பெருக்குதல்,
பாத்திரம் கழுவுதல் போன்ற மடாலய வேலைகளைச் செய்யவும் அனுமதி பெற்றுக் கொண்டு அதன் படி ஒழுகினாள். காலையும் மாலையும் தலைமைப்
பெண்ணின் கரங்களை முத்தி செய்வாள். சில வேளைகளில் அவளது பாதங்களையும் முத்தி செய்வாள். வேத நூல்களை வாசிக்கும் அவள் விசேடமாக
இசையாஸ், எரேமியாஸ் தீர்க்கதரிசனங்களையும், தாவீதரசன் சங்கீதங்களையும் வாசிப்பாள். ஏனெனில் அவற்றில் உலக மீட்பர் பற்றிய இறை
இரகசியங்களும், அருள் வேத இரகசியங்களும் அடங்கியிருந்தன.
|