Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

Miracles

   
 

 

 

 

தேவதாயின் பெற்றோரின் இறப்பும்
அவள் அனுபவித்த துன்பங்களும் :

தேவதாய் தேவாலயத்துக்குச் சென்ற ஆறாம் மாதம் தனது அன்புத் தந்தையான சுவக்கீன் நோய்வாய்ப்பட்டிருப்பதை தரிசனத்தில் அறிந்து இறைவனிடம் அவருக்காக வேண்டிக் கொள்ள, அவரும் சுவக்கீனுக்கு உதவவும் ஆறுதல் கொடுக்கவும் பன்னிரண்டு தூதர்களை அனுப்பினார். தேவதாயார் தன் தந்தை மரிக்கப் போகும் நாளையும் நேரத்தையும் அறிந்து தனக்கு காவலாயிருந்த சம்மனசுகள் யாவரையும் அவருக்கு உதவியாக அனுப்பினாள்.

புனித சுவக்கீன் சம்மனசுகள் யாவரையும் பார்த்ததோடு அவர்கள் தன் அன்பு மகள் மரியாளின் காவற் சம்மனசுகள் என்பதையும் தெரிந்து கொண்டார். அந்த சம்மனசுகளுடன் அவர் அநேக இறை இரகசியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் எல்லாம் வல்ல கடவுள் மரியாளை மெசியாவுக்குத் தாயாராகத் தெரிந்தெடுத்துக் கொண்டார் என்னும் விடயத்தை மரியாள் இன்னும் அறியவில்லை என்பதை இறை உத்தரவின் பேரில் அவருக்கு வெளிப்படுத்தி; இந்த நல்ல செய்தியை பிதாப்பிதாக்கள் ஸ்தலத்திலிருக்கும் பிதாப்பிதாக்களுக்கு அறிவிக்க முடிவு செய்தனர்.

சம்மனசுகள் சுவக்கீனுடன் பேசிக்கொண்டிருந்த யாவற்றையும் தலைமாட்டில் நின்று உதவி செய்து கொண்டிருந்த அவரது மனைவி புனித அன்னம்மாள் இறைவனின் உத்தரவால் அறிந்து கொண்டாள். ஒரு புறம் சம்மனசுகள் கூறிய இனிய செய்தியால் பெரு மகிழ்ச்சி கொண்ட புனித சுவக்கீன் மறுபுறம் மரண வேதனையில் நாவு தடுமாற இறுதி மரணத் துன்பங்களைப் பொறுமையோடு சகித்து அறுபத்தொன்பதரை வயதில் இவ்வுலகை நீத்தார்.

சுவக்கீன் தனது நாற்பத்தாறாவது வயதில் புனித அன்னம்மாளை மணம் செய்து இருபதாம் வருடத்திலேயே புனித மரியாள் பூமியிற் பிறந்தாள். சுவக்கீன் இறக்கும் போது மரியாள் மூன்றரை வயதை அடைந்திருந்தாள்.

சுவக்கீன் மரித்த பின் சம்மனசுகள் தமது இராக்கினியான மரியாளிடம் சென்று நடந்த யாவற்றையும் அவளிடம் கூறினர்.

இது பற்றி மரியாள் தனது தாயாரான புனித அன்னம்மாளுக்கு எழுதும் வரை தானறிந்த விடயத்தை அன்னம்மாள் வெளியிடவில்லை. தன் தந்தையின் மரணமே மரியாள் இளமையில் அனுபவித்த முதல் துன்பமாகும். இத் துன்பத்தை அவள் அனுபவிப்பதற்கு சிறிது காலத்துக்கு முன் இறைவன் அவளுக்கு காட்சியளித்து " நீர் நமக்கு மிகப் பிரியமானவள். நாமும் உம்மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளோம். ஏனெனில் நாம் அன்பு செய்கிறவர்களுக்கு அளவற்ற புண்ணிய வரங்களைக் கொடாமல் இரோம். அப் புண்ணிய வரங்கள் துன்ப துயரங்களும் சிலுவையும் தான் " என்றார். அப்போது அவள் சகல புனிதர்களும் வேதசாட்சிகளும் கொண்டிருந்த உறுதியை விட மகா உறுதியோடு " இறைவா! என் விருப்பப்படி எவ்விடயத்தையாவது தெரிந்து கொள்ள உனக்கு உரிமையுண்டானால் சாகும் வரை உமது பேரன்புக்காக சகலவிதமான துன்பங்களையும் அனுபவிப்பதையே பாக்கியமாக தெரிந்து கொள்வேன் " என்றாள்.

இறைவனும் அம் மன்றாட்டை ஏற்றுக் கொண்டு அவள் தன் தந்தையாரின் மரணத்தால் அடைந்த துயரம் போதாதென்று மேலும் அநேக துன்ப துயரங்களை அவளுக்கு கொடுக்க ஆரம்பித்தார்.

முன்னர் அவளுக்கு தான் கொடுத்த அருள் வளங்களாகிய சம்மனசுகளைப் பார்த்து, பேசி, பழகுதல் போன்றவற்றையும், தான் அவளுக்கு கொடுத்து வந்த இடைவிடாத காட்சிகளையும் நிறுத்தி விட்டார். பக்திச் சுவாலகர் என்னும் சம்மனசுகளை விட மேலான அன்புடன் இறைவனை நேசித்த தேவதாய் இதனால் அனுபவித்த வேதனை சகல புனிதர்கள் அனுபவித்த வேதனைகளைவிட மிக அதிகமாயிருந்தது. தன் அசட்டைத்தனத்தினால் அல்லது நன்றி கெட்டதனத்தினால் தான் சகல நன்மைகளையும் இழந்தோமோ என்று எண்ணி சொல்லிலடங்காத் துன்பமடைவாள். இவ்வாறான வேளைகளில் இறைவன் தனது சக்தி பொருந்திய புதுமைகளால் அவளைக் காப்பாற்றினார். இவ்வாறான நிகழ்வுகளால் நாளுக்கு நாள் அவளது மனக்கிலேசம் அதிகரித்தது.

இவற்றையெல்லாம் அறிந்த லூசிபர் என்னும் தலைமைப் பிசாசு அவளிடம் விளங்கிய முழு நிறைவான புண்ணிய சாயல்களைக் கண்டு இவள் தான் தன் தலையை நசுக்கப் போகிறவளோ என எண்ணி மிகுந்த அச்சம் கொண்டதுமின்றி தன் சகாக்களுக்கும் அதனை வெளிப்படுத்தி மிக உக்கிரமான தந்திரங்களால் அவளை வெற்றி கொள்ள வேண்டுமென்று எல்லா வழிகளிலும் முயற்சி செய்யத் தொடங்கியது.

தேவதாய் தனது இடைவிடாத செபத்தினாலும், ஆழ்ந்த வேத நூல் வாசிப்பினாலும் அதன் மாயைகளை தோற்கடிக்கவே அவளது இதயத்தை மாசுபடுத்த தன்னால் இயலாதிருப்பதைக் கண்ட லூசிப் பேய் வேறு சில தந்திரோபாயங்களைச் செய்யத் தொடங்கியது. அந்தத் தீய மனப் பசாசு மரியாளுடனிருந்த மற்றக் கன்னியர்களிடம் சென்று " உங்கள் குருப் பிரசாதிகளும் தலைமைப் பெண்ணும் மரியாளில் மட்டுமே அன்பு செலுத்துகிறார்கள். அவர்களுக்கு உங்களைப் பற்றிய எண்ணமே வருவதில்லை " என்று பல தவறான விடயங்களை அவர்களது அற்ப மனங்களில் ஏவி விட, அக் கன்னியரும் லூசிப்பேயின் சூழ்ச்சிகளை அறியாமல் மரியாளைப் பகைத்து, நிந்தித்து, அருவருத்து வெறுத்து அவளை வேஷக்காரி என்றே எண்ணினார்கள்.

ஒருநாள் அவர்கள் ஒன்றுகூடி, குருக்களுக்கும், தலைமைப் பெண்ணுக்கும் மரியாள் மீதுள்ள நல்லெண்ணத்தைக் கெடுத்து அவளை தேவாலயத்தை விட்டு துரத்தி விட திட்டமிட்டு, சொல்ல முடியாத நிந்தை அவமானங்களைச் செய்தனர். அவ்வேளை மரியாள் மிகுந்த தாழ்ச்சியுடன் தான் குற்றவாளியே என்றும், இனிமேல் சரிவர நடப்பேன் என்றும் மிகவும் தாழ்ச்சியுடன் சொன்ன போதும், அவர்கள் மேலும் தணியாத கோபம் கொண்டு அவளை பல்வேறு விதமாய் அவமரியாதை செய்து இறுதியில் ஒரு நாள் அவளைத் தனி அறையில் கொண்டு போய் நிந்தை செய்து அடித்துத் துன்புறுத்திக் கூக்குரலிட்டனர். ஆலய குருப்பிரசாதிகள் கூக்குரல் கேட்டு ஓடிவந்து என்னவென்று கேட்க பசாசினால் தூண்டப்பட்ட கன்னியர் மரியாள் வேஷக்காரி என்றும் அவள் அரை நிமிடம் கூட தங்களுடன் இருக்க தகுதி அற்றவள் என்றும் கூறினார்கள்.

குருக்கள் அவளைத் தனிமையில் அழைத்து கோபித்து, தேவாலயத்தை விட்டு வெளியேறுமாறு விரட்டினர். மரியாளோ அவர்களிடம் நன்றியுடனும், பணிவுடனும் பேசி இனிமேல் தான் சரியாக நடப்பேன் என்று உறுதியளித்ததுமின்றி மற்றக் கன்னியரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டாள். அவர்களும் மரியாள் குருக்களின் வேண்டுதலின் பேரிலேயே மன்னிப்புக் கேட்டாள் என எண்ணி மீண்டும் அவளைத் தங்களோடு சேர்த்துக் கொண்டனர். நரக சர்ப்பமானது அவளை விடாமல், தொடர்ந்தும் அவள் மேல் பற்பல தீமைகளைக் கட்டவிழ்த்து விட்டது.

அந்தக் கன்னியர்கள் மீண்டும் மரியாள் மீது பெரும் பகை கொண்டனர். ஆனால் இறைவன் அவளது புனிதத் தன்மைக்கு எதிராக எந்தத் தீங்கும் செய்ய அந்தப் பசாசை அனுமதிக்கவில்லை. மரியாள் அனுபவித்த இத்தகைய துன்பங்களும் சோதனைகளும் அவளது தாழ்ச்சியையும் புண்ணியங்களையும் மென்மேலும் அதிகரிக்கச் செய்தன.

அவளது சோதனைகளுக்கு முடிவு கொண்டு வரும் வகையில் இறைவன் பெரிய குருவான சிமியோனுக்கும், தீர்க்கதரிசியான அன்னம்மாளுக்கும் தோன்றி, மரியாள் மேல் சுமத்தப்பட்ட குற்றமெல்லாம் அவதூறானவை என்பதை வெளிப்படுத்தினார். அவர்களும் உடனே மரியாளை அழைத்து, மற்றக் கன்னியர்களின் பேச்சைக் கேட்டு தாங்கள் அவளைத் தண்டித்தது தவறு என் மன்னிப்புக் கோரினர்.

இவ்வாரு சோதனையின் வடுக்கள் இறைவனால் அற்புதமாக நீக்கப்பட்ட போதும், தன் இதயத்தினின்று இறைவன் நீங்கியிருந்தமை போன்ற உணர்வு அவளை விட்டு நீங்கவில்லை.

மேற்படி சோதனைகள் பத்து வருடங்கள் தொடர்ந்தமையினால் சொல்ல முடியாத வேதனைகளையும், மனக்கிலேசங்களையும் அனுபவித்த போது இறைவன் தன் திருமுகத்தை அடிக்கடி அவளுக்குக் காண்பிக்காது விட்டிருந்தாரெனினும் ஒரு சில சமயங்களில் அவளுக்கு ஆறுதல் வரும் படியாக தன்னைக் காண்பித்தார். இறைவனின் தாயாக வருவதற்கு இவ்வாறான சோதனைகளும் துன்பங்களும் மரியாளுக்கு அவசியமானவையாய் இருந்தன.

மரியாளுக்கு பன்னிரண்டு வயது நடக்கும் போது அவளது தாயாரான அன்னம்மாள் மரிக்கப் போகும் செய்தியை சம்மனசுகள் அவளுக்கு அறிவித்தனர். இறைவன் சம்மனசுகளுக்கு மரியாளை அவளது தாயிடம் தூக்கிக் கொண்டு செல்லுமாறும் வேறொரு சம்மனசை அவளது சாயலில் மற்றக் கன்னியர்களுடன் இருக்குமாரும் கட்டளையிட்டார். மரியாள் தன் தாயிடம் சென்றதும் நோய்வாய்ப்பட்டிருந்த அவளுக்கு ஆறுதல் கூறி அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டு ஆசிர்வாதங் கேட்டாள்.

அன்னம்மாள் தன் மகள் மெசியாவுக்குத் தாயாவாள் என்று தெரிந்திருந்தும் அதை அவளிடம் வெளியிடவில்லை. ஆனால் குருப்பிரசாதிகளின் உத்தரவுப்படியான ஓர் வாழ்வைத் தெரிந்து கொள்ளாமல் தேவாலயத்தை விட்டு விலகக் கூடாதென்றும் இறைவனுக்குச் சித்தமாயிருந்தால் யூதா கோத்திரத்தில் தாவீதின் வம்சத்தில் பிரந்த ஒருவனை மணம் புரிந்து கொள்ளலாம் என்றும் இருக்கின்ற பொருட்களை ஏழைகளோடு பகிர்ந்து கொள்வதுடன் இறைமகனின் வருகைக்காக இடைவிடாது செபிக்க வேண்டுமென்றும் கூறினாள்.

மிகத் தூய்மையான உள்ளமும், தன் மகளை விட சற்று உயரமும், சிவந்த வெண்மை நிறமும் உடையவளான புனித அன்னம்மாள் தனது இருபத்தி நான்காம் வயதில் சுவக்கீனை மணம் புரிந்து இருபது வருடங்களின் பின் தனது நாற்பத்து நான்காம் வயதில் மரியாளைப் பெற்று, மூன்று வருடங்கள் அவளோடும், ஒன்பது வருடங்கள் அவளை மடத்தில் விட்டும் வாழ்ந்திருந்து மொத்தமாக ஐம்பத்தாறு வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்து நன்மரணம் அடைந்தாள்.

 

Next Page