Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

Miracles

   
 

 

 

 

தேவதாய் புனித சூசையப்பரை மணம் புரிதல்

தேவதாயை சம்மனசுகள் தேவாலயத்துக்குக் கொண்டு வந்த போது அவள் அவர்களிடம் திருமண பந்தத்துக்குள் உட்படுத்தப்பட நான் செய்த
பாவம் என்னவென்று தனக்குக் காட்டுமாறு பணிவன்போடு கேட்டாள். இதைக் கேள்வியுற்ற இறைவன் தன் தெய்வீகத்தினின்று வெளிப்பட்டு
அவளுக்குக் காட்சிக் கொடுத்து, அவள் இதயத்திலடைந்த இருளை அகற்றி மேலான இன்ப ஆறுதல்களால் நிரப்பினார். அவளுக்கு பன்னிரண்டரை
வயது நடக்கும் போது மறைநூலில் இறைவன் ஈசாக் என்ற ஒரே புத்திரனை தமக்குப் பலியிடுமாறு ஆபிரகாமுக்கு கட்டளையிட்டதாகக் கூறியதைப்
போன்ற ஒரு சம்பவம் இவளுக்கும் நிகழ்ந்தது. இறைவனுக்கும் சம்மனசுகளுக்கு முன்பாகவும் எப்பொழுதும் கற்புடைய கன்னியாய் இருப்பேன் என்று
வாக்களித்து தன்னுடைய கற்பென்னும் லீலிமலரை கண்ணிலும் மேலாய்க் காப்பதை விடவும் மேலான இன்பமொன்றும் தனக்கு வேறில்லை
என்றிருந்தவளுக்கு இறைதந்தை அவள் இறைவனின் தாயாகத் தெரிந்து கொள்ளப்பட்டவள் என்பதை வெளிப்படுத்தாமல் அவள் திருமண பந்தத்தைத்
தெரிந்து கொள்ள வேண்டுமென்று மட்டும் சொன்னார். இந்தத் திடீர் அறிவிப்பினால் தேவதாய் மிகவும் மனம் நொந்து வேதனையடைந்தாளெனினும்
தானாக ஒரு முடிவையும் எடுக்காமல் ஆபிரகாமை விட அதிக மனத்திடன் கொண்டு அனைத்தும் இறை சித்தப்படியே ஆகட்டும் என்றிருந்தாள்.
இறைவன் சிமியோன் என்பவருக்கு கனவில் தோன்றி சுவக்கீனின் புதல்வியான மரியாளுக்கு ஒரு மணவாளனைத் தேடுமாறு பணித்தார். அவரும்
குருப்பிரசாதிகள், சாஸ்திரிகள் முதலானோரைக் கூட்டி "தாய் தந்தையர் இல்லாத இப்பெண் திருமணஞ் செய்யும் விருப்பம் அற்றவள். எனினும் ஒரு
பெண் தனக்கென ஓர் அந்தஸ்தை அடையுமுன் தேவாலயத்தை விட்டு வெளியேறுவது வழமைக்கு மாறானதால் நாம் அவளுக்கோர் கணவனைத்
தேடுவது நலம்" என்றார். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு அக் கன்னிகைக்கென்று இறைவனால் தெரியப்பட்ட வாலிபனைத் தங்களுக்குக்
காண்பிக்க வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொண்டனர்.

அதன்படியே நாளொன்றைக் குறித்து அந்த நாளிலே ஜெருசலேம் பட்டணத்திலுள்ள தாவீது கோத்திரத்து வாலிபர் அனைவரையும் தேவாலயத்தில்
ஒன்று கூடுமாறு பணித்தனர். தேவதாயின் பதினான்காம் வயதின் கடைசி நாளில் இது நிகழ்ந்தது. சிமியோன் தேவதாய்க்கு இச் செய்தியை அறிவித்த
போது அவள் அனுபவித்த வேதனை சொல்லிலடங்காது. இறைவன் தனது கருணையால் அவளைத் திடப்படுத்தாவிட்டால் அந்தக் கணமே அவள்
உயிர் பிரிந்திருக்கும்.

வாலிபர் ஒன்று கூடுவதற்கு ஒன்பது நாட்களுக்கு முன் இவ்விடயத்தை அறிந்திருந்த தேவதாய் இறை சித்தப்படியே அனைத்தும் நிறைவேறட்டும்
என்று மன விரக்தியுடன் வேண்டிக் கொண்டாள். அப்போது இறைவன் அவளுக்குக் காட்சியளித்து "என் மாடப் புறாவே! துயரப்படாதே! உன்
விருப்பத்துக்கும் மன்றாட்டுக்களுக்கும் செவி கொடுக்கிறேன். குருப்பிரசாதிகள் என் அருள் ஒளியின் உதவியுடனேயே அனைத்தையும் செய்வார்கள்.
உன் விருப்பங்களுக்கு இணங்கும் ஓர் மணவாளனை உனக்குக் கொடுப்பேன். என் அருளுதவிகளையும் உனக்குச் செய்வேன். என்னுடைய
பணியாளர்களில் எனக்கு மிகவும் பிரியமான ஓர் மனிதனைத் தெரிந்து கொள்வேன். என்னுடைய முடிவற்ற வல்லமை எப்பொழுதும் உன்னோடிருந்து
உன்னைப் பரிபாலிக்கும்" என்றார்.

இந்த ஆறுதலான வார்த்தைகளால் தேவதாயின் துயரம் தணிந்தது. அவளும் தன் புனிதத்துவத்தைக் காக்க வேண்டும் என இறைவனிடமும்
சம்மனசுகளிடமும் வேண்டிக் கொண்டாள். அவர்களும் இறை வல்லமை அவள் மேல் எல்லையற்றதாய் இருக்கிறதென்று கூறினார்கள்.

குறிப்பிட்ட நாளில் தாவீது கோத்திரத்தைச் சேர்ந்த வாலிபர் அனைவரும் தேவாலயத்தில் கூடினர். அவர்களுள் நசரேத்தில் பிறந்து ஜெருசலேமில்
வசித்து வந்த சூசையப்பரும் இருந்தார். அப்போது அவருக்கு வயது முப்பத்து மூன்று. அவர் உடலில் எதுவித குறைபாடற்றவராயும் , மிக
அழகுள்ளவராயும், ஈடிணையற்ற நற் பண்புகளைக் கொண்டவராயும் இருந்தார். அவர் தனது பன்னிரெண்டாவது வயதில் தான் கற்போடிருப்பேன்
என இறைவனுக்கு வாக்களித்தார். இவர் தேவதாய்க்கு தூரத்து உறவினர்.

குருப்பிரசாதிகள், சாஸ்திரிகள் முதலானோர் இறை அருளோடு அனைத்தையும் செய்ய எண்ணி இறைவனை இரந்து மன்றாடத் தொடங்கினர்.
அப்போது இறைவன் சிமியோனை அழைத்து "வாலிபர் அனைவரும் தத்தமது கைகளில் ஓர் காய்ந்த தடியைப் பிடித்துக் கொண்டு இறை சித்தம்
நிறைவேறும் படியாய் வேண்டிக்கொள்ளும்படி சொல்" என்றார். அவ்வாறே அனைவரும் வேண்டுதல் செய்ய, புனித சூசையப்பரின் கையிலிருந்த
தடி பூத்ததுமன்றி அவரது தலையின் மேலாக வெண்ணிறமான ஓர் மாடப்புறாவும் பறந்தது. அவ்வேளை சூசையப்பரின் அடிமனதில் ஓர் ஒலி
தோன்றி "எனது ஊழியனாகிய சூசையப்பரே! மரியாள் உனக்கு மனைவியாயிருப்பாள். அவள் மீது மிகுந்த பக்தி சிரத்தையோடு நடந்து கொள்.
ஏனெனில் அவள் எனக்கு மகா பிரியமுள்ளவள், நீதியுள்ளவள், உடலிலும் ஞான அறிவிலும் மிகப் புனிதமானவள், அவள் சொல்வதைச்
செய்வாயாக" என்றது.

இறை சித்தப்படியே தேவதாயை சூசையப்பருக்கு மனைவியாக்கினார்கள். தேவதாய் சிமியோன், தீர்க்கதரிசினியாகிய அன்னம்மாள் ஆகியோரின்
கரங்களை முத்தமிட்டு தன் கணவனோடும், சில பணியாளர்களோடும் தேவாலயத்தை விட்டு நசரேத் என்னும் சிற்றூருக்குச் சென்றார்கள்.
அவ்விடத்தில் தேச வழமைப்படி தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து தங்கள் வீட்டுக்குச் சென்றனர். அப்பொழுது தேவதாய் தான்
இதுவரை காலத்தில் இப்போது தான் முதற் தடவையாக ஒரு தனிமனிதனோடு பேசப்போவதால் சம்மனசுகளை அதற்குச் சாட்சியாக இருக்கும்படி
மன்றாடினாள். அவர்களும் அவளது கண்களுக்கு தோன்றி அவளின் வாயினின்று புறப்படும் வார்த்தைக்கு அதிக பலத்தையும், சூசையப்பரின்
இதயத்தில் பிறர் சிநேகத்தையும் அதிகரிக்கச் செய்தனர். அப்போது தேவதாய் சூசையப்பரிடம், தான் என்றும் கன்னியாய் இருக்க இறைவனுக்கு
வாக்களித்துள்ளதால் அதை நிறைவேற்ற தனக்கு உதவுமாறு வேண்டினாள். உடனே சூசையப்பரும் தனது கற்பைக் காப்பாற்ற தான் கொடுத்த
வாக்கையும் தேவதாய்க்கு வெளிப்படுத்தினார்.

இருவரும் மிக மன ஆறுதலடைந்து தாங்கள் இறைவனுக்கு கொடுத்த வாக்கைப் புதுப்பித்து தூய வழியில் நடந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து
வாழத் தீர்மானித்தனர். பின்னர் புனிதர்களான சுவக்கீனும் அன்னம்மாளும் தமக்கென வைத்த சொத்துக்களை மூன்றாகப் பிரித்து ஒரு பங்கைத்
தேவாலயத்துக்கும், ஒரு பங்கை ஏழைகளுக்கும், ஒரு பங்கைத் தமது தேவைக்கும் வைத்துக் கொண்டனர். சூசையப்பர் உழைப்புக்காக இளமையில்
தான் கற்றுக் கொண்ட தச்சு வேலையைச் செய்ய தன் மனைவியான தேவதாயிடம் அனுமதி கேட்டார். அதற்கு தேவதாய், "நாம் எளியவர்களாயிருக்க
வேண்டுமென்பதும், ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்பதும் இறை சித்தமாய் இருப்பதால் அதைச் செய்யலாம்" என அனுமதி அளித்தாள். ஏழைகளுக்கு
உதவி செய்ய அவளும் சூசையப்பரிடம் அனுமதி கேட்க அவரும் ஒப்புக் கொண்டார். தேவதாய் மீது சூசையப்பருக்கு பக்தி மரியாதை இருக்க
வேண்டுமென்று இறைவன் கேட்டுக் கொண்டதால் அவளது திருமுக தரிசனையின் முன் அவரிடம் விபரிக்க முடியாத பயபக்தி உண்டாயிற்று. அவர்களின்
திருமணம் செப்டெம்பர் எட்டாம் நாள் நடைப்பெற்றது. அப்போது தேவதாய்க்கு பதினான்கு வயதும், சூசையப்பருக்கு முப்பத்திமூன்று வயதுமாய்
இருந்தது.

Next Page