இறைவனுக்குத் தாயாயிருப்பதற்கு வேண்டிய நிறை வரங்களை மரியாள் பெற்றுக் கொள்ளுதல்
தேவதாய் திருமணமாகி வார்த்தையானவர் மனுவுருவாகும் வரையான ஆறுமாதம் பதினேழு நாள் வரை தாழ்ச்சியுடையவும், வீரத்துவமான
புண்ணியங்களுடையவுமான நற்செயல்களைச் செய்து வந்தாள். இறை இரகசியத்துக்கு இணைந்து செயற்படும் வகையில் இறைவன் அவளை
சீரும் சிறப்புமாக ஒழுங்கு படுத்தினார். அது எவ்வாறெனில் - ஒரு நாள் நடுச்சாமத்தில் இறைவனைத் துதிக்க அவள் எழுந்த போது சம்மனசுக்கள்
அவளிடம் "தூயவரான இறைவனின் பத்தினியே! எழுந்தருளும். இறை மகத்துவம் உம்மை அழைக்கிறது" என்று கூற, அவள் "ஆண்டவரே! இதோ!
நான் உம் முன் தூசியாக எழுந்து நிற்கிறேன். அடியாள் என்ன செய்ய வேண்டுமென்பது உமது சித்தம்" என்றாள். அந்த மாத்திரத்திலேயே அவள்
பரவசமாகி இறை தரிசனத்தைக் கண்டாள். உலக மீட்பர் மனுவுருவாக வேண்டுமென மன்றாடுமாறு இறைவன் அவளுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது அவள் முதல் நாள் இறைவன் செய்தவற்றை முழு நிறைவாக அறிந்து கொண்டாள். மேலும் தான் எப்படி மண்ணால் உண்டுபண்ணப்
பட்டாளென்பதையும் அவள் கண்டு கொண்டாள். அதனால் பாதாளம் வரை தாழ்ந்து தனது சிறுமையை எண்ணிப் பணிந்து கொண்டிருந்தாள்.
பின் இறைவன் இரண்டாம் நாள் செய்தவற்றை அவள் அறிந்து கொண்டாள்.
வானத்தின் பேரிலும், பூமியின் பேரிலும் அவளுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டது. அவளோ அந்த அதிகாரத்தை இறை மகிமைக்கு
அவசியமானபோதும் மற்றும் காற்று, கடல், வெப்பம், குளிர் என்பவற்றின் மட்டிலும் செலுத்துவாள்.
இறைவன் மூன்றாம் நாள் செய்தவற்றையும் அவளுக்கு வெளிப்படுத்தப்பட்டன. நீர், புல் பூண்டுகள், மரங்கள், கனிகள், மற்றும் பூதங்கள், கற்கள்
போன்றவற்றின் குணாதிசயங்களை நன்கறிந்தாள். இவளுடைய அறிவானது ஆதாம் சாலமோன் மற்ற மனிதர்கள் போன்றோரின் அறிவைப்
பார்க்கிலும் மிக மேலானதாய் இருந்தது. படைப்புகளால் தனக்கு யாதொரு இடையூறும் வராதவாறு வரம் கொண்டிருந்தாள். தான் துன்பப்படச்
சித்தமாயிருந்ததினாலே அந்த வரத்தை தனது நன்மைக்கு அவள் பயன்படுத்தவில்லை. இறைவன் மனிதரை அன்பு செய்கிறார் என்பதையும்
அறிந்திருந்ததினால் பாவிகளின் மீட்புக்காய் தனது உயிரையும் கொடுக்கச் சித்தமாயிருந்தாள்.
நான்காம் நாளில் இறைவனின் படைப்புக்கள் யாவும் நல்லவையே எனக் கண்டு, அவற்றின் பெருமைகளையும் தெளிவாக அறிந்தாள். கிரகங்கள்,
நட்சத்திரங்கள் மற்றும் அனைத்து படைப்புக்களின் எண்ணிக்கை, இயல்பு போன்ற அனைத்தையும் நன்கறிந்ததுமன்றி அவற்றின் மீதான
அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டாள். அவ்வதிகாரத்தை தனக்காக உபயோகிக்காமல் தன்னுடைய திருப்பாலனுக்காக உபயோகித்துக் கொள்வாள்.
எகிப்து பட்டணத்தில் வெப்பம் அதிகமாயிருந்ததால் அவ்வெப்பம் குறையும் படி பாலகன் பேரில் சூரியனுக்கு கட்டளை இடுவாள். இந்த நான்காம்
நாளிலேயே உலக மீட்பர் திருவருட்சாதனங்களை ஏற்படுத்துவார் என்றும் அவை மிகுந்த வரப்பிரசாதங்களைக் கொடுக்குமென்றும் பாவிகளில்
அநேகர் அவ்வரப்பிரசாதங்களை அடைய விருப்பமற்றிருப்பார்கள் என்றும் இறைவன் தேவதாய்க்குச் சொன்னார். அதனால் அவள் அடைந்த
துயரம் சொல்லிலடங்காது. அத் துயரம் அவளின் வாழ்நாள் முழுவதும் நிலைத்தது.
ஐந்தாம் நாள் மனிதர் தமது பாவத்தனங்களின் மூலம் உலகிற்கு வரவேண்டிய தேவையையும், விருப்பத்தையும், தாகத்தையும் இறைவனுக்கு
ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அவளுக்கு வெளிப்படுத்தினார். மீட்பினை அடையப் போகும் மனிதரின் அற்பமான தொகையையும்
அவளுக்குக் காட்டினார். இந்நாளில் கடந்தகால - நிகழ்கால - எதிர்கால படைப்புக்களையும் அவற்றின் குணாதிசயங்களையும் அறிந்து கொண்டாள்.
இந்த ஐந்தாம் நாளிலே இறைவன் தன் படைப்புகள் அனைத்தையும் அவளுக்குத் தெரிவித்து "உன் பெயர் என்ன" என்று அவளைக் கேட்டார்.
அவள் "இறைவா! நீர் மண்ணால் உண்டாக்கிய ஆதாம் என்பவருடைய மகள்" என்றாள். அதற்கு இறைவன் "இனி நமது ஒரே மகனுக்காய்
தெரிந்து கொள்ளப்பட்ட மாதா என்னும் பெயர் உன்னைச் சேரும்" என்றார். இவ்வசனம் சம்மனசுகளின் காதுகளில் மாத்திரம் முழுமையாக
விழுந்தது. அவளது காதிலோ "தெரிந்து கொள்ளப்பட்ட" என்பது மாத்திரமே விழுந்தது. அப்போது அவள் இறைவன் மனுவுரு எடுக்கவேண்டுமென்று
அன்போடும் பரிவோடும் வேண்டிக்கொண்டாள். மூவொரு இறைவனும் அவளுக்கு "விரைவில் அப்படியே ஆகும்" என்று ஆசி கொடுத்துச் சென்றார்.
ஆறாம் நாளில் அவள் ஒன்பது மணி நேர செபத் தியானத்தில் இருக்கையில் அந்நாளில் படைக்கப்பட்ட அனைத்தையும் பார்த்தாள்.
மிருகங்களையும், அவற்றின் வகைகள், குணாதிசயங்கள் என்பவற்றையும் கண்டறிந்தாள். முதல் மனிதன் எதனாலே ஆக்கப்பட்டான்
என்பதையும், ஆத்துமம் சரீரத்தோடு எவ்வாறு ஒன்றித்ததென்பதையும் கண்டு கொண்டாள். ஆதாம் பாவத்தில் வீழ்வதற்கு முன்
கொண்டிருந்த நீதியின் தன்மையையும், அவர் எப்படி ஏமாற்றப்பட்டார் என்பதையும் பாவத்திற்கு இணங்கிய பின் அவரால் உலகிற்கு உண்டான
பொல்லாப்பையும் கண்டு, சொல்லொணாத் துயரம் அடைந்தாள்.
ஏழாம் நாளில் சம்மனசுக்களால் மோட்சத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்டாள். அங்கு இறைவன் இரண்டு ஞானாதிக்கர்களை உருவம் எடுக்குமாறு
கட்டளையிட்டார். பின் அவளுக்கு ஓர் ஆடை அணிவிக்கப்பட்டது. அதன் ஒளி சூரியனை விட அதி பிரகாசமுள்ளதாய் இருந்தது. பின்னர்
ஞானாதிக்கர்கள் அவளுக்கு ஓர் கவசத்தை அணிவித்தனர். அந்த ஆடை தூய்மையின் அடையாளமும், கவசம் இறை பயத்தின் அடையாளமும்
ஆகும். பொன் இழையாற் செய்த கூந்தலை அவளது தலையில் வைத்தனர். இது அவள் நினைப்பெல்லாம் இறை அன்பினால் மாத்திரம்
உண்டாகுபவை என்பதைக் குறிக்கும். பின் அவளது பாதத்தில் மிக அழகு பொருந்திய பாதணிகளை அணிவித்தனர். இது அவளுடைய செயல்கள்
அனைத்தும் இறை மகிமையை மாத்திரம் நாடியதாக இருக்கும் என அர்த்தம் பெறும். அவளது கரங்களில் விலைமதிப்பற்ற காப்புகளை அணிந்தனர்.
இது அவளது ஆத்துமத்தின் பெருந்தன்மைகளை காட்டும். அவளது விரலில் பெறுமதிமிக்க மோதிரத்தைப் போட்டனர். இது அவள் கொண்டுள்ள
தூய ஆவியின் வரங்களைக் குறிக்கும். தேவசம்பந்தமான மூன்று புண்ணியங்களைக் குறிக்கும் வகையில் மூன்று இரத்தினங்கள் பதித்த ஓர் மாலையையும்
அவள் பெற்றுக் கொண்டாள். அதிதூதரிடத்திலிருந்து அவள் கேட்கப் போகும் விசேட செய்திக்கு அவளது செவிப் புலன்களை ஆயத்தம் பண்ணும்
வகையில் பேரழகுடைய காதணிகளும் அணியப்பட்டன. அவளது ஆடையின் ஓரத்தில் எழுத்துக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவ்வெழுத்துக்களைக்
கூட்டி வாசித்தால் "இறைவனின் தாயாகிய மரியாள்" "கன்னித் தாயாகிய மரியாள்" என்னும் பொருளைத் தரும்.
எட்டாம் நாள் மீண்டும் ஒரு முறை ஆத்துமாவோடும் உடலோடும் சம்மனசுக்களின் உதவியோடு விண்ணகத்துக்கு எழுந்தருளிச் சென்றாள்.
அப்போது இறைவன் "இவள் தான் உங்களுடைய இராக்கினி" என்று சம்மனசுகளுக்கு திருவுளம் பற்றினார். அவர்களும் அதை மகிழ்வோடு
ஏற்றுக் கொண்டு இனிமை பொருந்திய சங்கீதங்களைப் பாடினர். அப்போது இறைவன் மரியாளை நோக்கி "நமது பத்தினியே! நம்மால் தெரிந்து
கொள்ளப்பட்டவளே! நீர் நமக்கு அன்புடையவளாய் இருப்பதால் நீர் விரும்புவது எதுவாயினும் நம்மிடம் கேளும். நாம் வாக்குத் தவறாத
இறைவனும் முழு நிறை சக்தியுள்ள அரசனுமாய் இருப்பதினால் நமது அரசில் ஒரு பங்கை நீர் கேட்டாலும் நாம் உமக்கு இல்லை என்று கூற
மாட்டோம்" என்றார். அதற்கு புனித மரியாள் பாதாளம் மட்டும் தாழ்ந்து "உம்முடைய அரசில் ஒரு பங்கை எனக்காக கேட்க மாட்டேன். மாறாக
அதை முற்றும் மனுக்குலத்துக்காகக் கேட்கிறேன்" என்றும் "சர்வ வல்லமை மிகுந்த அரசரே! உமது நித்திய இரக்கத்தினால் உம்முடைய ஒரே
மகனாகிய மீட்பரை எங்களுக்கு அனுப்ப மன்றாடுகிறேன்." என்றும் வேண்டினாள். அதற்கு இறைவன் "உனது வேண்டுதல்கள் நமக்கு
பிரியமுள்ளவையாயிருப்பதனால் மிக விரைவில் நமது ஒரே மகன் உலகின் மீது இரங்குவார்" என்று பதிலளித்தார். இதைக் கேட்டு அவள் ஆனந்த
மகிழ்வு கொண்டாள். பின்பு சம்மனசுகள் மீண்டும் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து பூமியில் விட்டனர்.
இறுதியாக ஒன்பதாம் நாளில் ஆத்துமத்தோடும் உடலோடும் பரலோகத்துக்கு எழுந்தருளி, இறைவனைப் பார்த்ததோடு படைப்பின் ஒவ்வொரு பகுதிகளையும்
பார்த்தாள். அப்போது பிரபஞ்சத்தையும் அதில் படைக்கப்பட்ட அனைத்தையும் அவற்றின் முரண்படாத ஒத்திசைவு - ஒழுங்குகசைவுகளையும்
அவைகள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் விதித்த தொழில்களையும் பார்த்தாள். இறைவன் படைத்த அனைத்திற்கும் இவளே அரசி என்பதற்கு
அடையாளமாக அவளது தலையில் பேரழகுள்ள ஓர் முடியைச் சூட்டினர். அதில் சில எழுத்துக்கள் இருந்தன. அவற்றை அவள் கண்டு
கொள்ளவில்லை. அவ்வெழுத்துக்கள் "தேவதாய்" என்று அர்த்தம் உடையவை. அவ்வேளை அவள் அதி உன்னதமான வரங்களைப் பெற்றுக்
கொண்டாள்.
|